திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்ப்பு முகாம் மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன், ஊரகத் தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின், மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் பலராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதில் 6,521 பேருக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை உட்பட 6 கோடியே 67 லட்சத்து 69 ஆயிரத்து 663 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கியபின் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் பேசுகையில், திமுக ஆட்சியில் 15 லட்சம் பேருக்கு 500 ரூபாய் மட்டுமே முதியோர் உதவி தொகை வழங்கியதாகவும், தற்போது 38 லட்சம் முதியோருக்கு முதியோர் உதவிதொகையை 1,000 ரூபாய் உயர்த்தி தமிழகம் முழுவதும் 50 சதவீத முதியோர்களுக்கு உதவித்தொகையை அதிமுக வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.
விழா முடிந்தபின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பெஞ்சமின், ‘ரஜினி - கமல் யார் யாரோடு இணைந்தாலும் அதிமுக தொடர்ந்து மக்கள் ஆதரவால் வெற்றிபெறும், மக்களின் ஆதரவு அதிமுகவிற்கு தொடர்ந்து இருக்கும். ரஜினி கூறுவதுபோல் வருகிற 2021இல் அதிசயம் நடக்கும், அதிமுக மீண்டும் ஆட்சியில் தொடர்வதுதான் அந்த அதிசயம்’ என்றார்.