திருவள்ளூர்: திருத்தணி அடுத்த பீரகுப்பம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட வட்டார பொது சுகாதார ஆய்வக அலுவலகத்தின் திறப்பு விழா நடைபெற்றது. அதில் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமை வகித்தார். நோய்த்தடுப்பு மருந்து துறை இயக்குநர் செல்வவிநாயகம் வரவேற்க, திருத்தணி எம்.எல்.ஏ சந்திரன் முன்னிலை வகித்தார்.
இதில் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கைத்தறி மற்றும் துணிநுால் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் பங்கேற்று, வட்டார பொது சுகாதார ஆய்வகத்தை திறந்து வைத்தனர். அதனைத் தொடர்ந்து, வீரமங்கலத்தில் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலும், பாண்டரவேட்டில் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலும், மத்தூரில் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலும் என மொத்தம் மாவட்டம் முழுவதும் 12 இடங்களில் துணை சுகாதார நிலைய கட்டங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து அவர் பேசியதாவது, “தமிழகத்தில் 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. மேலும், 2,730 துணை சுகாதார நிலையங்கள் உள்ளன. இதில் 1,500 துணை சுகாதார நிலையங்கள் வாடகை கட்டடங்களாக இயங்கி வருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட துணை சுகாதார நிலையங்கள் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால், தற்போது படிப்படியாக துணை சுகாதார நிலையங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருகிறது.
அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 12 புதிய கட்டடங்கள், சுமார் 3.55 கோடி ரூபாய் மதிப்பில் கட்டி மருத்துவ சேவை பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. ஏற்கனவே திருவள்ளூரில் மருத்துவக் கல்லுாரி திறக்கப்பட்டு, 200 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது மாவட்ட தலைமை மருத்துவமனையாக திருத்தணி அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
அதற்காக, 45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருத்தணியில் மாவட்ட தலைமை மருத்துவமனைக்காக புதிய கட்டடங்கள் கட்டும் பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகிறது. விரைவில் மாவட்ட தலைமை மருத்துவமனை திறந்து பயன்பாட்டிற்கு விடப்படும். இன்று (நவ.14) சர்க்கரை நோய் தினம் என்பதால், அனைத்து மருத்துவமனைகளிலும் சிறப்பு முகாம் நடத்தி, சர்க்கரை நோய் குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் முறையாக மருத்துவர்கள் ஆலோசனை பெற வேண்டும். நடைபயிற்சி, உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். அரசு மருத்துவமனைகளில் உள்ள உணவகங்களை ஆய்வு செய்து, தரம் இல்லாத உணவகங்கள் மூடப்படும்" என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இணை இயக்குநர் சேகர், துணை இயக்குநர்கள் ஜவஹர்லால் செந்தில்குமார், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி, உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: யார் இந்த குரூஸ் பர்ணாந்து? தூத்துக்குடி நகரத் தந்தைக்கு இன்று மணிமண்டபம் திறப்பு!