உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்று பரவலைத் தடுக்க, அனைவரும் கிருமிநாசினிகளைப் பயன்படுத்தி கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்திவருகின்றனர்.
ஊரடங்கு காரணமாக மருந்தகங்களில்கூட கிருமிநாசினி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுஒருபுறமிருக்க, ஒரு சிலரோ இந்த இக்கட்டான சூழ்நிலையைப் பயன்படுத்தி கிருமிநாசினிகளை அதிக விலைக்கு விற்பனை செய்துவருகின்றனர்.
இதனைக் கருத்தில்கொண்டு, திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த விஞ்ஞானி இளங்கோவன் என்பவர் குறைந்த செலவில் அடித்தட்டு மக்களும் வாங்கிப் பயன்பெறும் வகையில் சோலார் பேனல் முறையில் கிருமிநாசினியை தயாரித்துள்ளார்.
![சோலார் மூலம் கிருமிநாசினியை தயாரித்த இளங்கோவன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-trl-01-spl-story-byet-vis-scr-7204867_11052020180436_1105f_02502_951.jpg)
சோலார் பேனல் என்னும் சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் யூனிட் அமைத்து, உப்புக் கரைசலை அதற்குள் சேர்க்கிறார். பின்னர் அது சோடியம் ஹைப்போ குளோரைட் ஆக மாறியவுடன் அதனைக் கிருமிநாசினியாகப் பயன்படுத்தலாம்.
இந்தக் கிருமிநாசினியின் விலை ஒரு லிட்டர் 20 ரூபாயிலிருந்து 30 ரூபாய்வரை மட்டுமே. இவர் உருவாக்கிய ஹைப்போ குளோரைட் கரைசலை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து வீட்டைச்சுற்றி உள்ள பகுதிகளில் தெளித்து சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள முடியும். இதன்மூலம் கிருமிகள் எதுவும் நம்மை அண்டாமல் பாதுகாத்துக்கொள்ளலாம்.
இவரின் சீரிய முயற்சியை திருவள்ளூவர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் பாராட்டியுள்ளார். மேலும் இந்தக் கிருமிநாசினியை முதல்கட்டமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு ஊராட்சிகளில் மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதியளித்துள்ளார்.
இதையும் படிங்க: கிருமிநாசினிகளால் தோல்களுக்கு ஏற்படும் ஆபத்து?