திருவள்ளூர்: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்று சோழவரம் ஏரி. இந்த ஏரியில் தேக்கி வைக்கப்படும் மழைநீர், புழல் ஏரிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு ஏரி முழுமையாக நிரம்பாமல் 14 விழுக்காடு தண்ணீரை மட்டுமே கொண்டு உள்ளது.
தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் ஏரிக்கு மழைநீர் வரத்து அதிகரித்து, ஏரியின் நீர்மட்டம் உயரும் வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் சோழவரம் ஏரிக்கரையில் போடப்பட்டுள்ள செம்மண், சுமார் இரண்டு அடி ஆழத்திற்கு உள் வாங்கியுள்ளது. ஏரியின் கரையில் 4 இடங்களில் மண் சரிந்து சேதமடைந்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக சோழவரம் ஏரியின் சேதமடைந்த கரை முறையாக சீரமைக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் மெத்தனப்போக்குடன் இருப்பதாகவும், மழை அதிகரித்து ஏரி நிரம்பினால் மண் சரிந்துள்ள இடங்களில் முற்றிலும் விரிசல் ஏற்பட்டு ஏரிக்கரை உடைந்து வெள்ள பாதிப்பு ஏற்பட்டலாம். அப்படி நிகழும் போது, அருகில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக அச்சம் தெரிவித்தனர்.
தமிழ்நாடு அரசு உடனடியாக சோழவரம் ஏரியை சீரமைத்து, மழைநீரை முழுமையாக சேமிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: வரத்து அதிகரிப்பு, விலை வீழ்ச்சியால் ஆற்றில் கொட்டப்பட்ட வெண்டைக்காய்!