காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட பஜார் வீதியில் 22 வயது மதிக்கத்தக்க பெண்ணுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இந்நிலையில் அவர் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இதனைத்தொடர்ந்து அவரது குடும்பத்தினர் 12 பேர் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் ஏற்கனவே கரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்குப் பிறந்து இரண்டு வாரமே ஆன குழந்தை, அவரது கணவர், தாய் என ஐந்து பேருக்கு கரோனோ தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களும் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இவர்கள் பாதிக்கப்பட்ட பகுதி அதிக கடைகள் மிகுந்த பஜார் பகுதி என்பதால் குன்றத்தூர் முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு இங்கு தொடர்வதால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருள்கள் வாங்க வெளியே வரமுடியாத சூழல் நிலவுகிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பிறந்து இரண்டு வாரங்களே ஆன குழந்தை உள்பட ஐந்து பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் குன்றத்தூர், தச்சு தெருவைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவர் நேற்று கரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரிடம் விசாரித்தபோது அதேபகுதியில் உள்ள முகக் கவசங்கள் தயாரிக்கும் கம்பெனியில் பணிபுரிந்து வந்ததாகவும், அதன்காரணமாக தொற்று ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது.
வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் அந்தப் பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. குன்றத்தூர் பகுதியில் மட்டும் இதுவரை 18 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிர் இழந்துள்ளார்.
இதையடுத்து குன்றத்தூர் பகுதியில் ஒரு வார்டுக்கு ஒரு வழி என அனைத்து இடங்களிலும் வலை போன்ற கம்பிகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் பார்க்க: ஊதியம் கொடுத்த சான்றிதழ்களை தனியார் கல்லூரி சமர்ப்பிக்க முதலமைச்சருக்கு மனு