திருவள்ளூர்: கொசஸ்தலை ஆற்றின் குறுகே கொசத்தலையாறு நீரை இடைமறித்து சேமித்து வைப்பதற்காக பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கம் கட்டப்பட்டது. 3.2 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட இந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 35 அடியாகும். சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம்.
இந்த நிலையில், வட தமிழகம் மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 2வது நாளாக மிதமான முதல் கனமழை ஆனது பெய்து வருகிறது.
இதன் காரணமாக பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கத்திற்கு நீர்வரத்து 200 அடியில் இருந்து 1000 அடியாக அதிகரித்துள்ளது. அதனால் இன்று (ஜன.08) காலை நீர்த்தேக்கத்திலிருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு 50 கன அடியாக திறந்து விடப்பட்ட உபரி நீர் 1000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தின் கன அடி 3231 மில்லியன் கன அடியாக இருக்கும் நிலையில், கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையால் தற்போது நீர் இருப்பானது 3073 மில்லியன் கன அடியை எட்டி உள்ளது. அதேபோல் நீர்த்தேகத்தின் மொத்த அடி 35ல் தற்போது 34.75 அடி உயரத்தில் நீர் இருப்பு உள்ளது.
மேலும், கனமழையானது அதிகரிக்கும் பட்சத்தில் நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிக்க கூடும். அதனால் கொசஸ்தலை ஆற்றுக்கு உபரி நீர் திறப்பு அதிகரிக்க கூடும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு எதிரான மாலத்தீவு அமைச்சர்களின் கருத்துக்கள்: மாலத்தீவு வெளியுறவுத் துறை விளக்கம்..