சேவல் சண்டையை கோட்சை, சேவல் கட்டு, வெற்றுக்கால் சண்டை, கட்டுச் சேவல் சண்டை, வெப்போர் என ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஏற்ற விதிகளோடு பல பெயர்களில் நடத்துகிறார்கள். பொங்கல் பண்டிகையை ஒட்டி எவ்வாறு ஜல்லிக்கட்டு காளைகளை தயார்படுத்துகிறார்களோ அதேபோல், சண்டை சேவல்களும் தயார்படுத்துகின்றனர்.
பொதுவாகவே சேவல்களுக்கு சக சேவல்களை அடக்கி ஆள வேண்டும் என்ற குணமுண்டு. தான் பெரியவன் என்ற மமதையுடன் சண்டை செய்யத் தயாராக இருக்கும். அவ்வாறு, பணம் கட்டி நடத்தப்படும் சேவல் சண்டைகளால், சூதாட்டம், உயிரிழப்பு சேதங்கள் போன்றவையும் நடைபெறுகின்றன. இருவருக்கான போட்டியாக பார்க்கப்பட்ட சேவல் சண்டைகள் காலப் போக்கில் அதிகார வல்லமை படைத்த கவுரவமாக மாறி விட்டது. மேலும், சேவல்கள் துன்புறுத்தப்படுவது போன்ற நிகழ்வுகளும் நடந்தேறி வந்தன.
இதனால், வன விலங்குகள் கொல்லப்படுவதைத் தவிர்க்கும் பொருட்டும் நீதிமன்றம் சேவல் சண்டை விளையாட்டுக்குத் தடை விதித்தது. அரசு சார்பிலும் இது போன்ற விளையாட்டுகளை நடத்தக் கூடாது என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை அடுத்த மேல்முருக்கம்பட்டு பகுதியில், சட்ட விரோதமாக சேவல் சண்டை நடத்தப்பட்டுள்ளது. இதில் பத்துக்கும் மேற்பட்ட சேவல்கள் பயன்படுத்தப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் கூடி சேவல் சண்டையை நடத்தியுள்ளனர்.
தொடர்ந்து விளையாட்டு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, திருத்தணி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதை அறிந்ததும், அங்கிருந்தவர்கள் தங்களது சேவல்களுடன் நாலாபுறமும் ஓட்டம் பிடித்து தப்பியுள்ளனர். சேவல் விளையாட்டு நடைபெற்ற இடத்தை பார்வையிட்ட காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வேலூரில் இரண்டாயிரத்தைக் கடந்த கரோனா!