திருவள்ளூர்: கவரப்பேட்டை அருகே 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2 டன் குட்கா பொருள்கள், மூட்டை மூட்டையாக சிறிய ரக கூண்டு வாகனங்களில் ஏற்றப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்டதில், ஒரு கூண்டு லாரியில் இருந்து மூட்டைகளிலும், அட்டை பெட்டிகளிலும் குட்கா பொருள்களை சிறிய கூண்டு வாகனங்களில் மாற்றியது தெரியவந்தது.
இதனையடுத்து சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2டன் குட்கா பொருள்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் குட்கா பொருள்களை கடத்தி வந்த லாரி ஓட்டுநர் உள்ளிட்ட கடத்தலில் ஈடுபட்ட கண்ணன், அசோக்குமார், பூவரசன், விஜய் ஆகிய 4 பேரை கவரைபேட்டை காவல்துறையினர் கைது செய்தனர்.
பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து பெரிய கூண்டு லாரிகளில் குட்கா பொருள்கள் கடத்தி வரப்பட்டு, சிறிய வாகனத்தில் மாற்றி சென்னை புறநகர் பகுதிகளில் வினியோகம் செய்து வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து கன்டெய்னர் லாரி 2 சிறிய சரக்கு வாகனங்கள், கார் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த கடத்தலில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:பொன்விழா காணும் அதிமுக.. ஒற்றை தலைமைக்கு மாறுமா? தொண்டர்கள் எதிர்பார்ப்பு என்ன?