நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், வெளி மாவட்டத்திற்கும், வெளிமாநிலங்களுக்கும் மருத்துவ தேவை, திருமணம் மற்றும் உயிரிழப்பு போன்ற அவசரத் தேவைகளுக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருவள்ளூர் அடுத்த ஈக்காடு பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்கிற வாகன ஓட்டுநர், திருப்பதி சென்று வர இ-பாஸ் விண்ணப்பித்த நிலையில் கிடைக்காமல் போனது. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றும் ஜெகதீஷ் மற்றும் தினேஷ் ஆகிய இருவரை, சதீஷ் குமார் அணுகியுள்ளார்.
அங்கு தற்காலிக ஊழியர்கள், 2500 ரூபாய் பணம் கொடுத்தால் இ-பாஸ் பெற்றுத் தருவதாகக் கூறியுள்ளனர். இதற்கு ஓட்டுநரும் சம்மதம் தெரிவித்துள்ளார். அதன் பின் மறுநாள், மேலும் 2500 ரூபாய் கொடுத்தால் தான் தர முடியும் எனத் தெரிவித்து உள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டுநர், உடனடியாக திருவள்ளூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
புகாரின் பெயரில் ஜெகதீஷ் மற்றும் தினேஷ் ஆகிய இருவரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.