திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகியான விஜயன் என்பவரது இல்ல காதணி விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், "ஓபிஎஸ் நடைப்பயணத்தால் எவ்வித தாக்கமும் ஏற்படாது. மேலும் ஓபிஎஸ் ஆல் தெருமுனை கூட்டங்கள் கூட நடத்த இயலாது இதில் எங்கு பொதுக்கூட்டம் நடத்துவது" என தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் ஓபிஎஸ்-ரஜினி சந்திப்பு குறித்து கேட்டபோது, "ரஜினி நடிக்கும் அடுத்த படத்தில் ஓபிஎஸ் குணச்சித்திர நடிகர் வாய்ப்பு கேட்டு சந்தித்திருக்கலாம்" என கிண்டல் செய்யும் விதமாக விமர்சித்தார்.
மேலும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற திட்டம் வரவேற்கத்தக்கது என கூறிய அவர், "அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல தான் தற்போது திமுகவிற்கு உள்ளது. தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றி மக்களுக்கு நல்லது செய்திருந்தால் தேர்தலை சந்திக்கத் தயாராக இருக்கலாம் என கூறினார்.
அதுமட்டும் அல்லாது, தேர்தலை சந்திக்க நான் தயார் என முதல்வர் ஸ்டாலின் சொல்ல முடியுமா அப்படி சொன்னால் 2024 தேர்தலில் திமுக கம்பெனியை மூடிக்கொண்டு வீட்டிற்குச் செல்ல வேண்டியதுதான். மேலும், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் பல கோடி ரூபாய் அரசு பணம் செலவு செய்வதைத் தடுக்கலாம். பள்ளி காலங்களில் மாணவர்கள் இரண்டு முறை தேர்வு நடத்தினால் பாதிக்கப்படுவார்கள் அதே போலதான் பல முறை தேர்தல் நடத்துவதும். என்று கருத்து தெரிவித்தார்.
தொடர்ந்து திராவிட கட்சிகளுடன் இணைந்து செயல்படுவதில் விருப்பம் இல்லை என அண்ணாமலை கூறியது தொடர்பாக பேசிய அவர், "தமிழகத்தில் பாஜக யாருடன் இனைந்து கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று முடிவெடுக்கும் அதிகாரம், அண்ணாமலைக்கு இல்லை" என தெரிவித்தார்.
அதேபோல் தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் தேர்தலில் மீண்டும் வெற்றி இயலுமா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, "திமுகவிற்கும், அதிமுகவிற்கும் கடந்த தேர்தலில் வெற்றிக்கான ஓட்டு சதவீதம் 3 சதவீதம் மட்டுமே பெரிய அளவில் திமுக வெற்றி பெறவில்லை.
அதேபோல் பல தொகுதிகளில் குறைந்தபட்ச வாக்குகளில்தான் அதிமுக தோல்வி அடைந்தது. மேலும், தற்போதைய திமுக தலைமையிலான அரசின் மீது மக்களுக்குக் கடுமையான விமர்சனங்களும் அதிருப்தியும் உள்ளதால் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது" என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இதையும் படிங்க: வெற்றிக்கு அச்சாரமிடும் வேலூர் பவளவிழா.. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்த அழைப்பு!