பள்ளிப்பட்டு வட்டம் கோண சமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா(19). பண்டார வீடு கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ்(19). இவர்கள் இருவரும் திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் உள்ள ஸ்ரீராம் கல்லூரியில் பி.எஸ்சி. கணினி அறிவியல் பாடப்பிரிவில் முதலாமாண்டு படித்து வருகின்றனர். இவர்கள் தினமும் கல்லூரிக்கு திருத்தணி ரயில் நிலையத்திலிருந்து ரயில் மூலம் பயணம் செய்து சென்று வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல் இரு மாணவர்களும் ரயிலில் கல்லூரிக்குச் சென்று வகுப்புகள் முடிந்தபின், மாலை ஆறு மணிக்கு சென்னை மத்திய ரயில் நிலையத்திலிருந்து திருத்தணிக்கு வரும் மின்சார ரயிலில் ஏறியுள்ளார்கள்.
ரயில் திருத்தணி ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்த வேளையில், ராஜாவும் பிரகாஷும் படிக்கட்டில் நின்று எட்டிப் பார்த்தபோது இருவரும் ரயிலிலிருந்து தவறிவிழுந்தனர். இதில் படுகாயமடைந்த இருவரையும் அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் இருவரையும் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதில் ராஜா மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து திருத்தணி காவல் துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை செய்துவருகின்றனர்.
இதையும் படிங்க: 18 மெட்ரோ ரயில் நிலையங்கள் தனியார் வசம் ஒப்படைப்பு!