திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் ஒன்றியம் புல்லரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி (30), அவருடைய மனைவி தேன்மொழி (26). இவர்களுக்கு ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
இந்தத் தம்பதிக்கு ஆறு வயதில் ஒரு குழந்தையும், ஒன்பது மாதத்தில் ஒரு குழந்தையும் உள்ளன. குடிப்பழக்கத்திற்கு மணி அடிமையாக இருந்ததாகவும், அடிக்கடி குடித்துவிட்டு வந்து தேன்மொழியுடன் சண்டையிட்டு வந்ததாகவும் தெரிகிறது.
இந்த நிலையில், கடந்த நான்கு நாள்களாக மணி வேலைக்குச் செல்லாமல் இரவு பகலாக குடித்துவிட்டு வந்து தேன்மொழியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் நேற்று மாலை குடித்துவிட்டு வந்த மணி தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில் மணி தேன்மொழியை அடித்ததாகவும் இதில் மனமுடைந்த தேன்மொழி தனது கணவர் கண்முன்னே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகவும் தெரிகிறது.
வீட்டில் சண்டையிடும் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் சிறிது நேரத்திற்குப் பிறகு வீட்டின் வெளியே உள்ள ஜன்னல் வழியாகப் பார்த்தபோது தேன்மொழி தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் உள்பக்கமாகப் பூட்டி இருந்த கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று, தூக்கில் தொங்கிய தேன்மொழியை மீட்டு திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் தேன்மொழியைச் சோதித்த மருத்துவர்கள் அவர் முன்னரே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்ததை அடுத்து உடற்கூராய்வுக்காக தேன்மொழியின் உடல் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டெல்லி பெண் காவலர் பாலியல் வன்கொடுமை: நீதி கேட்டு பேரணி