திருவள்ளூர்: வடமேற்குப்பருவ மழையின் காரணமாக, திருவள்ளூர் மாவட்டம் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் தனது முழுக் கொள்ளளவை எட்டிய நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து சுமார் 2,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.
இதனால், பூண்டி ஒன்றியம் மெய்யூரில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக ஆற்றுப் பாலம் உடைந்து, 20-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் பொதுப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வெள்ளத்தால் உடைந்த ஆற்றுப் பாலத்தை நேரில் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அதிமுக ஆட்சியில் அலட்சியத்துடன் இருந்த ஆட்சியாளர்கள்
மேலும் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கூறுகையில், 'கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 200 மீட்டர் நீளம் கொண்ட மேம்பாலத்தைக் கட்டுவதற்கு சுமார் ரூ.14 கோடியே 90 லட்சத்தில் டெண்டர் விடப்பட்டும் கடந்த ஆட்சியில் 20 விழுக்காடு மேம்பாலப் பணிகளைக்கூட முடிக்காமல், கடந்த ஆட்சியாளர்கள் அலட்சியம் காட்டி உள்ளனர்.
ஆனால், தற்போதைய திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு இந்தப் பாலத்தை ஆறு மாத காலத்திற்குள் முடிக்க நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது உடைந்த தரை பாலத்தை விரைவாக சரி செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என்றார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் மீனா பிரியதர்ஷினி உள்ளிட்ட பொதுப்பணித்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.