திருவள்ளூர் மாவட்டம் அதிகத்தூர் பகுதியில் தனியார் தொழிற்சாலை ஒன்று இயங்கிவருகிறது. இந்தத் தொழிற்சாலைக்கு முதல்கட்டமாக நிலத்தை வழங்கிய விவசாயிகளின் குடும்பத்தினர் தங்களுக்கு நிரந்தர வேலை வழங்க வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் தனியார் வாகன தொழிற்சாலை, ஃபிரான்ஸ் நாட்டு நிறுவனத்திற்கு கைமாறியதால், இங்கு பணியாற்றிவந்த 178 பணியாளர்கள் பணி நீக்கம்செய்யப்பட்டனர். இதனைக் கண்டித்து பணி நீக்கம்செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கும், நிலம் வழங்கிய விவசாயிகளின் குடும்பத்தினருக்கும் வேலைவாய்ப்பு வழங்கக்கோரி போராட்டம் நடைபெற்றது. அதனோடு இதுதொடர்பாக திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்திலும் புகார் மனு அளித்துள்ளனர்.
நிலம் கொடுத்த மக்கள் தொடர் போராட்டம் நடத்திவந்த நிலையில், இன்று காலை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள் உள்பட ஏராளமானோர் தனியார் தொழிற்சாலையில் வாயில் அருகே அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, திருவள்ளூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் கங்காதரனை அழைத்து தொழிற்சாலை நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதுகுறித்து விரைவில் சாதகமான முடிவு தெரிவிக்கப்படும் என்று தெரிவித்ததையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்துசென்றனர். ஒரு பக்கம் உலகையே கரோனோ என்ற பெருந்தொற்று அச்சுறுத்திவரும் சூழலில் கூட்டம் கூட வேண்டாம் என அறிவுறுத்தியிருந்தும் மேற்கண்ட போராட்டம் நடைபெற்றுள்ளது.
இதில் யாரேனும் ஒருவருக்கு கரோனா இருந்திருந்தால் மொத்த பேரையும் பாதிக்கும் சூழ்நிலை உள்ளதைப் புரிந்துகொள்ளாமல் ஆர்ப்பாட்டம் நடத்தியது சுகாதார செயற்பாட்டாளர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பொதுத்தேர்வு அரைமணி நேரம் தாமதமாக தொடங்கலாம் -உயர் நீதிமன்றம் உத்தரவு