திருவள்ளூர் மாவட்டத்தில் நூறு விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக எரிவாயு சிலிண்டர்களில் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக ஸ்டிக்கரை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பரப்புரையை ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
இதுவரை 336 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்திருப்பதாகவும் உள்ளாட்சித்துறை, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி இருப்பதாகவும்,கடந்த பாராளுமன்றத் தேர்தலில் குறைவான வாக்குகள் பதிவான வாக்குச்சாவடி அமைந்துள்ள பகுதிகளில் வாக்கு விழுக்காட்டை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர்,மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும், எரிவாயு சிலிண்டர்களில் வாக்களிக்க வேண்டிய அவசியம் குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கரை ஒட்டி வீடு வீடாக சென்று வாக்களிப்பதை உறுதி செய்யக்கூடிய வகையில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதாகவும்தெரிவித்தார்.
தேர்தல் ஆணையம் சுவிதா என்ற ஆப்பை அறிமுகப்படுத்தி இருப்பதாகவும்,அதன் மூலம் கூட்டம் நடத்த அனுமதி பெற்றுக் கொள்ளலாம் என்றும் ஆட்சியர் கூறினார்.