குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம் பாரதியார் நகர் பிரதான சாலைப் பகுதியில் நேற்று மதியம் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து சென்ற நபரை அடையாளம் தெரியாத கும்பல் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது. அவர்களிடமிருந்து தப்பிக்க அங்கிருந்து அந்த நபர் ஓடியுள்ளார். கும்பல் விடாமல் விரட்டிச் சென்று அந்த நபரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது.
இது குறித்து குன்றத்தூர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்ததும் அம்பத்தூர் துணை ஆணையர் ஈஸ்வரன், உதவி ஆணையர் சம்பத், காவல் ஆய்வாளர் சார்லஸ் ஆகியோர் சம்பவயிடத்துக்கு விரைந்துவந்து கொலைசெய்யப்பட்டு கிடந்தவரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் குன்றத்தூர் அடுத்த கெலட்டிப்பேட்டையைச் சேர்ந்த போகபதி பாபு என்பதும் கடந்த ஆண்டு அதேப் பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகரான கிரிராஜன் குடும்பத்தினருடன் இவருக்கு முன்விரோதம் இருந்துவந்தது. மகளின் சீமந்தம் குறித்து பேச வேண்டுமென கிரிராஜனை வரவழைத்த போகபதி பாபு, அவரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்துள்ளார்.
இந்த வழக்கில் போகபதி பாபு உள்ளிட்ட சிலரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையிலிருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிணையில் வந்த போகபதி பாபு தலைமறைவாக இருந்துவந்துள்ளார்.
கிரிராஜன் கொலை செய்யப்பட்டு கடந்த மாதத்துடன் ஓராண்டு முடிவுற்றது. இந்தக் கொலைக்கு பழிவாங்கும் விதமாக சிறையிலிருந்து வெளியே வந்து தலைமறைவாக இருந்துவந்த போகபதி பாபு இங்கு வருவதைக் கண்காணித்து நேற்று போகபதி பாபுவை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளனர்.
கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற அடையாளம் தெரியாத கும்பலைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர். நடந்த இந்தக் கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தையடுத்து அந்தப் பகுதியில் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிக்க: ஏழு வருடங்களாக கைவிட்ட பிள்ளைகளை தேடி அலையும் தம்பதி!