திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த நத்தம் கிராமத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அதில் திமுக தலைவர் ஸ்டாலின், அவருடைய துணைவி துர்கா ஸ்டாலினுடன் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய ஸ்டாலின், ”கருணாநிதியால் அறிமுகப்படுத்தப்பட்டது சமத்துவ பொங்கல் விழா. அவர், அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் சமச்சீர் கல்வியையும் கொண்டு வந்தார். ஆனால், அதற்கு இப்போது ஆபத்து வந்துள்ளது. நீட் தேர்வால் அனிதா உள்ளிட்ட 16 மாணவர்கள் இதுவரை தற்கொலை செய்துகொண்டுள்ளனர். நான்கு மாதங்களில் வரவிருக்கும் ஆட்சி மாற்றத்திற்கு தமிழ்நாடு மக்கள் தயாராக உள்ளனர். எடப்பாடி அரசு, ஊழலை மறைக்கவே மத்திய அரசிடம் மண்டியிடுகிறது.
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என எப்படி இருந்தாலும் தமிழ்நாடு விவசாயிகளுக்காக குரல் கொடுப்பது திமுக மட்டுமே. ஏழாயிரம் கோடி ரூபாய் கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்தது திமுக ஆட்சி. தற்போது திமுக ஆட்சிக்கு வந்த உடனேயும் விவசாயிகள் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
விவசாயிகள் சேற்றில் கை வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும். பச்சைத் துண்டை போட்டுக்கொண்டு விவசாயிகளுக்கு எடப்பாடி பழனிசாமி பச்சை துரோகம் செய்து வருகிறார். தை பிறந்தால் வழி பிறக்கும்” என்றார்.