உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு திருவள்ளூர் ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய மகேஸ்வரி ரவிக்குமார், "திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் கட்ட தேர்தல் நடைபெறும் டிசம்பர் 27ஆம் தேதியன்று எட்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஆயிரத்து 403 வாக்குச் சாவடிகளுக்கு 1, 403 வாக்குச் சாவடி தலைமை அலுவலர் மற்றும் ஒன்பதாயிரத்து 308 வாக்கு சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் 30ஆம் தேதியன்று ஆறு ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஆயிரத்து 174 வாக்குச் சாவடிகளில் ஆயிரத்து 174 வாக்குச் சாவடி தலைமை அலுவலர்கள் ஏழாயிரத்து 688 வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மூன்று கட்டமாக அந்த ஒன்றியங்களைச் சேர்ந்த தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சியில் அனைத்து அலுவலர்களும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
வாக்குச் சாவடியில் தேர்தல் பணியாற்ற நியமிக்கப்படும் அலுவலர்கள் தனக்கு ஒதுக்கப்பட்ட பணியை செய்யாமல் போதுமான காரணமின்றி மறுத்தால் 1995ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் தேர்தல் விதிகளின் படி அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இதையும் படிங்க: காப்பீடு இல்லாத வாகனத்தை விற்க சட்டத்தில் திருத்தம் - அரசிதழில் வெளியீடு