திருவள்ளூர் மாவட்டத்தில், கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகமானது பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த நான்கு மாதங்களாக இம்மாவட்டத்திலுள்ள வழிபாட்டுத்தலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. மேலும் இம்மாவட்டத்தில் திருத்தணி மலைக் கோயிலில் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், தொன்றுதொட்டு ஆடிக்கிருத்திகை திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் கரோனா தொற்று வேகமாகப் பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில், ஆடிக்கிருத்திகை திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், ஆகம விதிகளின்படி, முருகப்பெருமானுக்கு அபிஷேகமும் தீபாராதனை பூஜைகளும் நடைபெறும் என்று பக்தர்கள் திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் https://tiruttanigaimurugan.org மற்றும் https://tnhrce.gov.in ஆகிய இணையதள தொலைக்காட்சி மற்றும் யூ-ட்யூப் வாயிலாக ஆடிக்கிருத்திகை தெப்பத்திருவிழா நிகழ்ச்சிகளை பொதுமக்கள் நேரலையாக கண்டு தரிசிக்க, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மதுரை ஆவின் முறைகேடு: முக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முதலமைச்சருக்கு கடிதம்!