திருவள்ளூர்: இயேசு கிறிஸ்து எருசலேம் நகருக்குள் வெற்றி ஆர்ப்பரிப்புடன் நுழைந்ததை கிறிஸ்தவர்களால் ஆண்டுதோறும் நினைவுப்படுத்தும் ஒரு நிகழ்வுதான் குருத்தோலை ஞாயிறு. இந்த நிகழ்வு இந்தாண்டு இன்று (ஏப்.10) குருத்து ஞாயிறாக நினைவுகொள்ளப்படுகிறது.
வழக்கமாக யூதர்கள் எல்லோரும் எருசலேம் நகரில் ஒன்று கூடி இந்த பஸ்கா விழாவை கொண்டாடுவர். இந்த பஸ்கா விழாவை கொண்டாட இயேசுவும் வருகிறார். அப்படி அவர் வரும்போது, இயேசுவானவர் கழுதையின் மீது ஏறி யூதேயா தேசத்தின் தலைநகரான எருசலேம் நகருக்கு செல்கிறார்.
அப்போது அங்குள்ள மக்கள் அவருக்கு வரவேற்பு கொடுக்கும் விதமாக ஒலிவமலை குருத்து இலைகளால் வழிநெடுகிலும் பரப்பினார்கள். மேலும், பலர் ஒலிவமலை இலைகளை தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டு, கடவுளின் பெயரால் வருகிறவராகிய ராஜா ஆசீர்வதிக்கப்பட்டவர் என்று ஆர்ப்பரித்தார்கள்.
இயேசுவை கல்லெறிந்து கொல்ல வேண்டும் என்று நினைத்தவர்களும் மனம்திருந்தி குருத்தோலைகளை கையில் ஏந்தி அவருக்கு வரவேற்பு கொடுத்தனர். இப்படி மக்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தி செல்லும் போது தாவிதின் குமாரனுக்கு ஓசன்னா, கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா ஸ்தோத்தரிக்கப்பட்டவர் என்று கோஷம் எழுப்பினர்.
இந்த குருத்தோலை ஞாயிறு அன்றே அவரை சிலுவையில் அறைய திட்டமிடுகின்றனர். எனவே தான் குருத்தோலை ஞாயிறுக்கு அடுத்த 7 நாள்களையும் பரிசுத்த பாடுகளின் வாரமாக சொல்லப்படுகிறது.
எனவே திருவள்ளூர் மாவட்டம் மணவள நகர் பகுதியில் அமைந்துள்ள அற்புத ஜெபகோபுரம் தேவாலயத்தில் குருத்தோலை ஞாயிறு அனுசரிக்கப்பட்டது.
மணவாளநகர் கணேஷபுரம் கேகே நகர் ஆகிய வழியாக 300க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் ஒன்றாக இணைந்து ஓசன்னா... ஓசன்னா... என்று பாடல்களைப் பாடினர்.
இதையும் படிங்க: தர்மபுரியில் ஸ்ரீராமர்- சீதாதேவி திருக்கல்யாணம்