திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. தமிழ்நாட்டில் தொற்று அதிகம் பாதித்த மாவட்டங்களில் திருவள்ளூர் மாவட்டம் நான்காம் இடத்தில் இருக்கிறது. மாவட்டத்தில் இன்று (மே 22) ஒரே நாளில் 1,667 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை மாவட்டத்தில் 12 ஆயிரத்து 46 பேர் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகள், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில், இன்று (மே 22) 1,305 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் சிகிச்சைப் பலனின்றி 32 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா தொற்றால் உயிரிழப்புகள் அதிகம் உள்ள மாவட்டங்களில் திருவள்ளூர் மூன்றாம் இடத்தில் உள்ளது.
இதனை தடுக்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகம் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாவட்ட எல்லைகள், மாநில எல்லைகளில் காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து நோய் பரவலை கட்டுப்படுத்த, ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து அரசின் விதிமுறைகளை பின்பற்றாமல் சுற்றித் திரியும் நபர்களின் மீது வழக்கு பதிந்து வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
மே 15ஆம் தேதி முதல் இதுவரை 1,330 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 1,696 நபர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட காவல் துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.