திருவள்ளூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அரவிந்தன், தற்போது உள்ள கரோனா காலகட்டத்திலும் பொதுமக்களின் நலன் கருதி, தொழில் நுட்ப உதவியைப் பயன்படுத்தி, புதிய முன்னெடுப்புகளை எடுத்து வருகிறார்.
இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அரவிந்தன் கூறுகையில்; 'திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் பலப் பகுதிகளில் இருந்து, காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வந்து செல்ல வேண்டிய சூழல் இருந்தது.
இந்த இடர்பாட்டை நீக்கும் வகையில், மாவட்டத்தில் உள்ள ஐந்து உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலேய மனுதாரர்கள் ஸ்கைப் (Skype) செயலி வாயிலாக காவல் கண்காணிப்பாளரிடம் தொடர்புகொண்டு, தமது குறைகளைத் தெரிவிக்கலாம். அப்படி தெரிவிக்கும் குறைபாடுகளுக்கு உடனடியாகத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
இதனால் பொது மக்களின் நேரம், பயணத் தொலைவு ஆகியவை சேமிக்கப்பட்டு குறைகள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தங்களுடைய மனுக்களைக் கொடுக்கலாம்.
மேலும் கரோனா தொற்று காலத்தில், முக்கியமான மனுக்கள் மட்டுமே காவல் அலுவலகத்தில் எடுக்கப்படும். அதே சமயம் தேவையில்லாமல் யாரும் வெளியில் வரக்கூடாது' எனக் கூறினார்.