திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்புகள் குறித்தும், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் பொன்னையா நமது ஈடிவி பாரத்திற்கு சிறப்பு பேட்டியளித்துள்ளார்.
அதில், “திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த நான்கு நாள்களாக கரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 23 விழுக்காடாக இருந்த நிலையில் கடந்த நான்கு நாள்களாக அது 11 விழுக்காடாக குறைந்துள்ளது.
மேலும், மாவட்டத்திலுள்ள 10 அரசு மருத்துவமனைகளில், 430ஆக இருந்த ஆக்சிஜன் படுக்கை வசதிகள், தற்போது 950ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், இரண்டு தனியார் மருத்துவமனைகளில் 102 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தொற்றால் பாதிக்கப்பட்ட 9 ஆயிரத்து 5 நபர்களில் 62 விழுக்காடு (5601) நபர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். 12 விழுக்காடு (1098) நபர்கள் கரோனா பாதுகாப்பு மையங்களிலும், 26 விழுக்காடு (2306) நபர்கள் மருத்துவமனைகளிலும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் 830 கட்டுப்பாட்டுப் பகுதிகள் உள்ளன. மாவட்டம் முழுவதும் 29 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றுவது கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், கரோனா விதிகளை மீறியவர்களிடமிருந்து இதுவரை 2.05 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஊரடங்கில் மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்து 18 வாகனங்கள் மூலம் பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கு அத்தியாவசிய பொருள்கள் கொண்டு செல்வதால் ஊரடங்கிற்குப் பொதுமக்கள் முழுமையாக அரசுக்கு ஒத்துழைப்பு தருகின்றனர்.
முன்பு, நாள் ஒன்றுக்கு 4 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் தடுப்பூசிகள் வரை பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இதனை நாள் ஒன்றுக்குப் பத்தாயிரம் தடுப்பூசியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நெல்லையின் ஆக்சிஜன் கையாளும் திறனை பிற மாநிலங்கள் பின்பற்றுகின்றன: ஆட்சியர் பெருமிதம்!