தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் தமிழ்நாடு முழுவதும் சிறப்புத் தள்ளுபடி விற்பனை நடைபெறுகிறது. அதேபோல் இந்த ஆண்டு திருவள்ளூர் பஜார் வீதியில் இயங்கிவரும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் சிறப்புத் தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் தொடங்கிவைத்தார். அங்கு அனைத்து ரக துணி வகைகள், பட்டுப் புடவைகள், ஃபேன்ஸி, இதர புதுவகையான துணிகளில் 30 விழுக்காடு சிறப்புத் தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது.
இதன் விற்பனையை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் கூறுகையில், "கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் செயல்பட்டுவருகிறது. சென்னை வட்டாரத்தில் 2019ஆம் ஆண்டு ரூபாய் 20 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டுமே இந்த ஆண்டு 70 லட்சம் ரூபாய் விற்பனை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் புதிய குடிமராமத்துப் பணிகள் சார்பில் இதுவரை ஐந்து ஏரிகளில் முழுமையாக பணிகள் முடிக்கப்பட்டும், 200 ஏரிகள் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது.
இதனையடுத்து ஒருவார காலமாகப் பெய்துவரும் மழையால் குசஸ்தலை ஆற்றின் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ள காரணத்தினால் பொதுமக்கள், சிறுவர்கள், இளைஞர்கள் தண்ணீருக்குள் இறங்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரியில் மழை காரணமாக 540 மில்லியன் கனஅடி நீர் சேர்ந்துள்ளதால் குடிநீருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்" எனத் தெரிவித்தார்.