திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூரில் உள்ள வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் தமிழ்நாடு மகளிர் ஆணைய உறுப்பினர் விஜயலட்சுமி ராமமூர்த்தி ஏற்பாட்டில் இவ்விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு கல்லூரியின் தலைவர் வாசுதேவன் தலைமை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சாதனை புரிந்த பெண் காவலர்களை பாராட்டி கேடயம் வழங்கி கௌரவித்தார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்தன், ”பெண்களுக்கு முடிவெடுக்கும் உரிமை மறுக்கப்படுவது இன்றும் தொடர்கிறது. பாலியல் தொல்லை குறித்த குற்றச்சாட்டுகளை பெண்கள் முன்வைக்கும் போது அவர்களையே குற்றவாளியாக மாற்றிவிடும் அநீதியும் நடந்துகொண்டேதானிருக்கிறது. குடும்பத்தில் ஆண்கள் அனைவரும் சாப்பிட்ட பின்னரே பெண்கள் சாப்பிட அனுமதிக்கப்படுவதாகவும் இந்தியாவில் ஐந்தில் ஒரு பெண் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் நிலை நிலவி வரும் அவலம் உள்ளது.
பாலியல் குறித்த குற்றச்சாட்டுக்களை விசாரித்து தீர்வு காண்பதில் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. மேலும் பெண்கள் ஆண்களுக்கு சமம் அல்ல, அவர்களை விட மேலானவர்கள், பெண்கள் அனைவரும் காவல்துறை, சட்டத் துறைகளை தேர்ந்தெடுத்து அதில் சிறந்து விளங்க வேண்டும்”என கூறினார்.
இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி ராமமூர்த்தி, திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குநர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க : கொரோனா வைரஸ் குறித்து அச்சப்படத் தேவையில்லை!