திருவள்ளூர் மாவட்டம் மெய்யூரில், பீடி தொழிலில் பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் ஈடுபட்டுவருகின்றனர். இந்த மாவட்டத்தில் ஊத்துக்கோட்டை, பொன்னேரி, காவாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் பீடி சுற்றும் தொழிலில் ஈடுபட்டுள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
பீடி தொழில் குறித்து...
பீடி சுற்றும் தொழிலில் இலை, தூள் போன்றவை முக்கியமான மூலப் பொருள்கள். இவற்றைப் பதமாகப் பயன்படுத்தி, நயமாகச் சுற்றிக் கடையில் சேர்த்தால் அதிகபட்ச கூலியாக 150 ரூபாய் கிடைக்கும். ஆனால், ஒரு முழு நாள் உழைப்பிற்கு இது மிகவும் குறைந்தபட்ச கூலி. அது மட்டுமில்லாமல் இவர்களின் உடல்நலமும் இந்தத் தொழிலால் பாதிக்கப்படுகிறது. இத்தொழிலில் ஈடுபடும் பெரும்பாலானோருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது.
கரோனாவும் பீடி தொழிலும்
இதனால், கரோனா வைரஸ் தொற்றும் பீடி தொழிலாளர்களைப் பாதிக்க அதிக வாய்ப்புள்ளது. ஊரடங்கால் இவர்களின் சொற்ப வருமானமும் கேள்விக்குறியானது. பீடி தொழிலாளர்கள் நல வாரியங்களைக் கண்காணிக்கும் மத்திய அரசு இதுவரை இவர்களுக்கு எவ்வித நிவாரணமும் வழங்காமல் இருப்பது மிகவும் வேதனையளிப்பதாக இத்தொழிலில் ஈடுபடுபவர்கள் தெரிவிக்கின்றனர். இதனைக் கண்டித்து அண்மையில் பீடி சுற்றும் தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆனாலும், நிவாரணம் கிடைக்கவில்லை.
இதுகுறித்து பீடி சுற்றும் தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் முருகன் பேசுகையில், “பீடி சுற்றும் தொழிலாளர்கள் நலன் கருதி ஒரு குடும்பத்துக்கு தலா 7,500 ரூபாய் நிவாரணமாக மத்திய அரசு வழங்க வேண்டும். இந்தத் தொழிலில் ஈடுபடுவர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும். மேலும் அனைவருக்கும் இலவசமாக மருத்துவப் பரிசோதனைகள் செய்ய வேண்டும்” என்றார்.
மெய்யூர் பகுதியில் வசிக்கக்கூடிய சிறியோர், பெரியோர் முதல் அனைவரும் இந்தத் தொழிலைச் செய்துவருகின்றனர். இதுகுறித்து பீடி சுற்றும் தொழில் செய்பவர்கள் கூறுகையில், “பல ஆண்டுகளாக இந்தத் தொழிலில் ஈடுபட்டுவருகிறோம். எங்கள் பிள்ளைகள் படித்திருக்கிறார்கள். ஆனாலும் சிலர் இத்தொழிலில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு உதவித் தொகை அல்லது கடனுதவி செய்து வேறு வேலையில் அமர்த்த அரசு உதவி செய்ய வேண்டும். அடுத்த தலைமுறைக்காவது மாற்றம் உண்டாகட்டும்” என்றனர்.
ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த பீடி தொழிலாளர்களை, இனியும் அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது அறமல்ல. மாற்றுத் தொழில் ஒன்றை கற்றுக் கொடுத்து அவர்களின் நிலையை உயர்த்துவதே சிறந்த நடவடிக்கையாக இருக்கும்.
இதையும் படிங்க: 'பீடி கம்பெனிகள் உதவவில்லை... அரசு உதவும் என காத்திருக்கிறோம்' - கலங்கும் பீடி தொழிலாளிகள்