தமிழ்நாட்டில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் தளர்வுகளற்ற ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் பொதுப் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் மருத்துவமனைக்கு செல்வதிலும், சிகிச்சை முடிந்து வீடு திரும்புவதற்கும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதனைக் கருத்தில் கொண்டு திருவள்ளூர் மாவட்டத்தில், தமிழ்நாடு போக்குவரத்துதுறை உத்தரவின் பேரில் திருவள்ளூர் வட்டாரப் போக்குவரத்து துறை சார்பில் நோயாளிகளை மருத்துவமனைக்கும் சிகிச்சை முடிந்து வீட்டிற்கும் அழைத்துச் செல்ல, 15 ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனை, வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் பன்னீர்செல்வம், திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனை தலைவர் அரசி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதற்கான நிகழ்ச்சி, திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
பின்னர் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் பன்னீர்செல்வம் கூறுகையில்,
சோதனை அடிப்படையில் ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆட்டோ ஆம்புலன்ஸ் நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கவும், சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் நோயாளிகளை வீட்டிற்கு கொண்டு சேர்க்கவும் பயன்படும். இந்த சேவை 24 மணி நேரமும் செயல்படும்.
இந்த சேவையை மக்கள் பயன்படுத்திக் கொள்ள அரசின் 1074 என்ற எண்ணை தொடர்பு கொண்டு ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையை பெற முடியும். ஆட்டோக்களில் பயணம் செய்யும் நோயாளிகளிடமிருந்து ஓட்டுனர்களை தனிமைப்படுத்த ஓட்டுநர் மற்றும் நோயாளிகளின் இருக்கைக்கு இடையில், பிளாஸ்டிக் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.
ஆட்டோ ஓட்டுநர்களுக்கு முகக்கவசம், கிருமிநாசினி மற்றும் கையுறை உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு உபகரணங்களும் 'லீகல் ரைட்ஸ் கவுன்சில்' சார்பாக கொடுக்கப்பட்டுள்ளது" என்றார். தொடர்ந்து, ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை தேவைக்கேற்ப ஆட்டோக்களின் எண்ணிக்கைகள் அதிகப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க:ஏரி நீரை வெளியேற்றி மீன்பிடிக்க முயற்சி: தட்டிக்கேட்ட சமூக ஆர்வலருக்கு கொலை மிரட்டல்!