அம்பத்தூர் அருகே 850 ஏக்கர் பரப்பளவு கொண்ட கொரட்டூர் ஏரியை ஒட்டியுள்ள முத்தமிழ் நகர், கங்கை நகர், எஸ்.எஸ் நகர் ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, கடந்த அக்டோபர் மாதம் ஆக்கிரமிப்பு வீடுகளை சென்னை மாவட்ட வருவாய்த் துறையும், பொதுப்பணித்துறை அலுவலர்களும் சேர்ந்து அகற்றினர்.
இதற்கு எதிராக முத்தமிழ் நகர் மக்கள் நீதிமன்றம் சென்று தங்களுக்கு சாதகமான தீர்ப்பை பெற்றுவிட்டதாகக் கூறி, அதே பகுதியில் மீண்டும் விடுகளை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பாபு, வருவாய் ஆய்வாளர் ஆனந்தன் தலைமையிலான அலுவலர்கள், அந்த மக்கள் வைத்திருந்த ஆர்டர் செல்லாது எனக் கூறி 25க்கும் மேற்பட்ட வீடுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கிருந்த மக்களுக்கும், அரசு அலுவலர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அம்பத்தூர் காவல் ஆய்வாளர் பொற்கொடி தலைமையிலான காவலர்கள் அங்கிருந்த மக்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, குணசேகரன் என்பவரின் மகள் மாலினியின் துப்பட்டாவை ஆண் காவலர்கள் முன்னிலையில் ஆய்வாளர் பொற்கொடி பிடித்து இழுத்து மானபங்கப் படுத்தியதாகவும், இது தொடர்பாக அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் சென்னை மேற்கு மண்டல காவல் இணை ஆணையர் விஜயகுமாரியிடம் மனு அளித்துள்ளனர்.