திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு ஊராட்சியை அடுத்த பாத்திமாபுரம் பகுதியில் வசித்துவருபவர் அருந்ததியர் இனத்தைச் சேர்ந்த ரவி மாதம்மாள் தம்பதியினர்.
இவர்களுக்கு தமிழரசி என்ற மகள் உள்ளார். தமிழரசி சிறுவயது முதலே படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். சிறு வயது முதல் மருத்துவ கனவிலேயே தனது படிப்பைத் தொடர்பவர்.
அவரது படைப்பின் ஆர்வத்தைப் பார்த்து பெற்றோர் எப்படியாவது தமிழரசி மருத்துவராகிவிட வேண்டும் எனப் பெரும் முயற்சி எடுத்ததன் மூலமாக தற்போது ரஷ்யாவில் உள்ள மாரி யுனிவர்சிட்டி கல்லூரியில் எம்பிபிஎஸ் நான்காம் ஆண்டு படித்துவருகிறார்.
தற்போது மேலும் படிப்பைத் தொடர அவருக்கு வழி இல்லாததால் கல்விக்கடன் பெற வேண்டி அவரது பெற்றோர் கடம்பத்தூர் ஒன்றியத்துக்குள்பட்ட மக்களை ஊராட்சியில் இயங்கிவரும் இந்தியன் வங்கியில் அணுகியுள்ளனர். அங்கு அலுவலர்கள் வெளிநாட்டில் படிப்பவர்களுக்கு எல்லாம் கடன் தர முடியாது எனக் கூறி மறுத்துவருகின்றனர்.
எங்களது பூர்விகச் சொத்து பத்திரத்தை அடைமானமாகத் தருகிறோம் எனக் கூறியும் வங்கி நிர்வாகி சிலர் மறுப்பு தெரிவிப்பதாகவும் அருந்ததியர் இனத்தைச் சேர்ந்ததால் மறுப்பதாகவும் தமிழரசியின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து இன்று மப்பேடு இந்தியன் வங்கி முன்பு பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது குறித்து தமிழரசியின் பெற்றோர் கூறுகையில், "அருந்ததியர் இனத்தில் அதிக அளவு படிப்பது தற்போது அரிதான விஷயமாக உள்ளது.
இந்த நிலையில் எப்பாடுபட்டாவது எங்கள் தலையை அடைமானம் வைத்தாவது தமிழரசி மருத்துவராக ஆக்கிவிட வேண்டும் எனப் போராடிவருகிறோம்
ஆனால் அதற்கு இந்தியன் வங்கி தடைக்கல்லாக உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் முதல் காவல் அலுவலர்கள் வரை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இதுபோன்ற போராட்டத்தில் இறங்கியுள்ளோம்.
இது குறித்து மாவட்ட ஆட்சியரும் மாநில அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த ஆர்ப்பாட்டத்தில் வாயிலாக கோரிக்கைவிடுத்து உள்ளோம்" என்றார்.