திருவள்ளூர்: ஆரம்பாக்கம் அருகே அமைந்துள்ள எளாவூர் ஒருங்கிணைந்த நவீன சோதனைச்சாவடி வழியாக ஆந்திரா, பிஹார், ஒடிசா, ராஜஸ்தான், கொல்கத்தா, அஸ்ஸாம் போன்ற வட மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு நாள் ஒன்றுக்கு சுமார் 20 முதல் 30,000 வாகனங்கள் வந்தடைகின்றன.
இவ்வாறு வந்தடையும் வாகனங்களின் ஓட்டுநர்கள் பலருக்கு தமிழ்நாட்டில் உள்ள இடங்களின் முகவரி தெரியாததால் எளாவூர் சோதனைச்சாவடியில் வழிகாட்டிகளாக நிற்கும் சிலருக்கு பணம் கொடுத்து வழிகாட்டுமாறு, அவர்களது வாகனத்தில் ஏற்றிச்செல்ல வேண்டிய இடத்திற்கு எளிமையாக செல்வது வழக்கம்.
அவ்வாறு வழிகாட்டியாக செயல்படும் செங்குன்றதைச் சேர்ந்த ஆப்ரகாம் (45) என்பவர் நேற்று சோதனைச் சாவடியில் நின்று கொண்டிருக்கும்போது, காவலர்கள் இருவர் அவரை தகாத வார்த்தையால் பேசி தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலில் இருந்த ஆபிரகாம் இன்று(அக்.9) காலை திடீரென கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை ஓரமாக உள்ள உயர் கோபுர மின்விளக்கின் உச்சியில் ஏறி, காவலர்கள் தன்னை தாக்கியதாகவும் அவர்கள் மீது உயர் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கத் தயங்குவதாகவும்; இதனால் மன உளைச்சலில் தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாகவும் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரையும், தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினரையும் உயர் கோபுரத்தின் மீது ஏறினால் தற்கொலை செய்து கொள்வதாகவும் எச்சரித்தார். பின்னர் ஆபிரகாம் உடன் பணிபுரியும் சக ஊழியர் ஒருவர் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகத்தெரிவித்த பின்னர், உயர் கோபுர மின்விளக்கின் மேலே இருந்து கீழே இறங்கினார்.
இதனால் கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையும் படிங்க:ரேஷன் அரிசி பதுக்கல்... ஒருவர் கைது