திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வழியாக கர்நாடகா ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் கடத்தி வருவதாக காவல் துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
இந்நிலையில், பாலாஜி நகர் பகுதியில் காலிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்களில் குட்கா, பான்பராக் உள்ளிட்ட போதைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, காவல் கணிகாணிப்பாளர் உத்தரவின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் ராக்கிகுமாரி தலைமையிலான காவலர்கள் அங்கு சென்று சோதனையிட்டனர். அப்போது, அங்கிருந்த கார்களில் ரூ.40 லட்சம் மதிப்பிலான போதைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் குட்கா உள்பட இரண்டு கார்களையும் காவல் துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், சித்ரா ராம் என்பவர் பெங்களூரிலிருந்து காரில் குட்கா பொருள்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சித்ரா ராமை கைது செய்து, தப்பியோடிய ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: ரூ. 42 லட்சம் மதிப்பிலான பான் மசாலா பறிமுதல்