திருவள்ளூர் மாவட்டம் மணவாள நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கேகே நகர் பகுதியில் வசிப்பவர் குமரவேல். இவர் பிரபல தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். இவரது மகள் லட்சுமிக்கு பல் மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் கிடைத்துள்ளது.
இதனால் கல்லூரியில் சேர்ப்பதற்காக ரூ.7 லட்சம் ரொக்கம், 15 சவரன் நகைகளை வீட்டில் வைத்துள்ளார். இந்த நகை, பணத்தை மாடி வீட்டில் உள்ள அலமாரியில் வைத்துவிட்டு கீழ்த்தளத்தில் குடும்பத்தினருடன் அனைவரும் நேற்று இரவு உறங்கச் சென்றுள்ளனர்.
இதனையறிந்த அடையாளம் தெரியாத கும்பல், கீழ்த்தளத்தை வெளிப்புறமாக பூட்டிவிட்டு மாடிக்குச் சென்று கதவின் பூட்டை வேறு சாவி கொண்டு திறந்து அலமாரியில் உள்ள பணம், நகைகளை திருடிச் சென்றனர்.
இதேபோல், அதேப் பகுதியில் கேட்டரிங் நடத்திவரும் லோகேஷ் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்த அதே கும்பல் 13 சவரன் நகைகள் ஒரு லட்சம் ரூபாய் என இரு வீடுகளில் மொத்தம் 30 சவரன் நகை ரூபாய் 8 லட்சம் ரொக்கத்தை திருடிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், திருட்டில் ஈடுபட்டவர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.