திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் கூட்டுறவுத் துறை சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின், தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான வணிக வளாகம் நவீனமயமாக்கப்பட்ட அலுவலக கட்டிடங்கள், 27 அம்மா சிறு கூட்டுறவு சிறப்பு அங்காடிகள் திறக்கப்பட்டன. மேலும் 254 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 2.27 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, “திருவள்ளூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க முதல்வரிடம் கூறி அவர் மூலம் உணவுத் துறை அமைச்சரிடம் தெரிவிக்கப்படும். எந்த பொருளாக இருந்தாலும் இந்த மாதம் சொல்லிவிட்டால் அடுத்தமாதம் உங்களுக்கு வழங்கப்படும். ஏனென்றால் அனைத்து பொருள்களையும் கூட்டுறவு சிறப்பு அங்காடிகளில் வைத்துக்கொள்ள முடியாது.

அதேபோல், கோதுமை தட்டுப்பாட்டைப் போக்க தேவைப்படுவோர் முன் மாதமே சொன்னால் அடுத்த மாதத்தில் ஏற்பாடு செய்யப்படும். முறையாக செயல்படும் கூட்டுறவு செயலாளர்கள் மாற்றப்பட மாட்டார்கள், முறையற்று இருந்தால் உடனடியாக எந்த சங்கம் ஆனாலும் மாற்றப்படுவார்கள்” என்று அவர் கூறினார்.
இதையும் படிங்க: ஆர்ப்பாட்டம் இல்லாமல் 5ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்தார் பினராயி