நெல்லை: ராதாபுரம் பத்திநாதபுரத்தைச் சேர்ந்தவர் அருள் மைக்கேல். இவரது மனைவி உஷா தேவி (68) இவர்களது மகனும், இரண்டு மகள்களும் திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகின்றனர். அருள் மைக்கேல் சில மாதங்களுக்கு முன்பு வயோதிகம் காரணதாக உயிரிழந்த நிலையில், மூதாட்டி உஷா தேவி மட்டும் பத்திநாதபுரத்தில் உள்ள தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 21ஆம் தேதி உஷா தேவி வீட்டில் மயங்கிய நிலையில் சரிந்து விழுந்து கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது உஷா தேவி உயிரிழந்து விட்டார். இது குறித்து ராதாபுரம் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதன் பெயரில் போலீசார் விசாரணையை தொடங்கினர். மூதாட்டி உஷா தேவியின் கழுத்தில் காயங்கள் இருந்ததும் அவர் அணிந்திருந்த நகைகள் காணாமல் போனதும் விசாரணையில் தெரிய வந்தது.
எனவே, நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அதன்படி அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது கேமராக்கள் உடைக்கப்பட்டிருந்தது.
இதனால் போலீசாருக்கு சந்தேகம் அதிகரித்ததைத் தொடர்ந்து அருகில் இருந்த பிற கேமராக்கள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டதில் சம்பவத்தன்று சுமார் 16 வயது சிறுவன் ஒருவன் உஷா தேவி வீட்டுக்குள் செல்வது தெரியவந்தது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் அச்சிறுவன் பல்லவிளை பகுதியைச் சேர்ந்தவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவனை பிடித்து விசாரித்தபோது மூதாட்டியின் இறப்புக்கு பின்னணியில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், ”மூதாட்டி உஷா தேவி வீட்டிற்கு, அதே பகுதியைச் சேர்ந்த ஜெயா என்பவர் அவ்வப்போது வீட்டு வேலை செய்வதற்காக வந்து செல்வது வழக்கம். அப்போது ஜெயா தனது மகன் ரஞ்சித்தையும் உஷா தேவி வீட்டிற்கு அழைத்துச்சென்றுள்ளார்.
கல்லூரியில் படித்து வரும் ரஞ்சித், உஷா தேவி கை மற்றும் கழுத்தில் அதிக நகை அணிந்திருப்பதை நோட்டமிட்டு, அந்த நகைகளை எப்படியாவது அடைய வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். மேலும் தனது நண்பரான பல்லவிளை பகுதியைச் சேர்ந்த சிறுவனுடன் சேர்ந்து நகைகளை கொள்ளை அடிக்கத் திட்டமிட்டுள்ளார். அதன்படி சம்பவத்தன்று ரஞ்சித் மற்றும் சிறுவன் இருவரும் உஷா தேவியின் வீட்டுக்குள் நுழைந்து, அவரைத் தாக்கிய பின்னர் துணியால் கழுத்தை நெரித்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் உஷா தேவி மயக்கம் அடைந்ததும் அவர் கை மற்றும் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 10 பவுன் நகைகளை திருடி அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். இதற்கிடையில் இருவரும் கழுத்தை நெரித்ததில் உஷா தேவி இறந்துள்ளார். ஆனால், எதுவும் நடக்காதது போல் சிறுவனும் ரஞ்சித்தும் கொள்ளையடித்த நகைகளை கோலியான்குளத்தை சேர்ந்த தம்பதிகளான உதயபிரகாஷ் அவரது மனைவி சகாயசுபா இருவரின் உதவியோடு வள்ளியூர் மற்றும் ராதாபுரம் பகுதிகளில் அடமானம் வைத்து பணமாக்கி உள்ளனர்.
இதையடுத்து ரஞ்சித், உதய பிரகாஷ் மற்றும் அவரது மனைவி சகாய சுபா ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். கொள்ளையடித்த பணத்தில் கல்லூரி மாணவன் ரஞ்சித் மற்றும் சிறுவன் இருவரும் உல்லாச வாழ்க்கை வாழத் திட்டமிட்டுள்ளனர். ஆனால், ராதாபுரம் போலீசார் இந்த வழக்கில் அதிரடியாக விசாரணை நடத்தி சம்பவம் நடைபெற்ற 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்தனர். நகைக்காக சிறுவன் மற்றும் கல்லூரி மாணவன் இணைந்து மூதாட்டியை கொலை செய்த சம்பவம் நெல்லையில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பட்டாசு தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து.. ஒருவர் பலி!