திருநெல்வேலி: பிராஞ்சேரி அருகே மர்ம நபர்களால் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் குறித்து, முன்னீர்பள்ளம் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம், பிராஞ்சேரி அருகே குளக்கரையில் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் முன்னீர்பள்ளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவரின் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து, இறந்தவரின் உடலில் பல்வேறு பகுதிகளில் வெட்டுக் காயங்கள் இருந்ததால், இது கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்து நிலையில், சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து முன்னீர்பள்ளம் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், இறந்தவர் கோபாலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி சுரேஷ் என்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில், நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன், கோபாலசமுத்திரம் பகுதியில் முகாமிட்டு சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகிறார்.
உயிரிழந்த சுரேஷின் உடல் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், உடற்கூறு ஆய்விற்காக வைக்கப்பட்டுள்ள சூழலில் கோபாலசமுத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மனு எழுதி கொடுக்க கல்லூரி மாணவிகள் நியமனம்.. நெல்லை ஆட்சியர் அதிரடி நடவடிக்கை!