நாங்குநேரி சட்டப்பேரவை இடைதேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் 33 ஆயிரத்து 445 வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளார். இதனால் காங்கிரஸ் தன் கைவசம் இருந்த ஒரு சட்டப்பேரவை தொகுதியை இழந்துள்ளது.
தேர்தல் அறிவித்த சமயத்தில் நாங்குநேரி தொகுதியை திமுகவிடம் பெரிதும் போராடி காங்கிரஸ் பெற்றது என தகவல்கள் அப்போது வெளியானது. மேலும் காங்கிரஸின் கோட்டை என கூறப்பட்ட நிலையில் தற்போது காங்கிரஸ் தோல்விக்கு என்ன காரணம் என்ற கேள்வி எழுந்துள்ளது.
நாங்குநேரி தொகுதியின் கடந்தகால தேர்தல் வரலாற்றை உற்று நோக்கினால் 2016 சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 74 ஆயிரத்து 932 வாக்குகளை (43 .45 %) பெற்றது. அப்போது அதிமுக 57 ஆயிரத்து 617 வாக்குகளை (33.7%) பெற்றது. இதேபோல் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதியில் திமுக 86 ஆயிரத்து 306 வாக்குகளை (51.22%) பெற்றது. அதிமுக 51 ஆயிரத்து 596 வாக்குகளை (30.62%) பெற்றது. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் 10 சதவிகிதம் வாக்குகள் அதிகம் பெற்று காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதே போல் 2019 நாடாளுமன்ற தேர்தலில் நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதியில் திமுக அதிமுகவை விட 20 விழுக்காடு கூடுதல் வாக்குகளை பெற்றுள்ளது. ஆனால் தற்போது நடந்த சட்டப்பேரவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் வெறும் 61,991 வாக்குகளை பெற்றுள்ளார். 2016 சட்டப்பேரவை தேர்தல் மற்றும் 2019 நாடாளுமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் பெற்ற வாக்குகளை ஒப்பிட்டு பார்த்தால் தற்போது திமுக கூட்டணியில் காங்கிரஸ் 30 விழுக்காடு வாக்குகளை இழந்துள்ளது. காங்கிரஸ் அடைந்துள்ள படுதோல்விக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் முக்கியமாக வேட்பாளர் தேர்வில் காங்கிரஸ் கோட்டை விட்டது எனக் கூறப்படுகிறது.
நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் செல்வாக்கு மிக்க நபர் என்றாலும் தொகுதி மக்களுக்கு புதுமுகம். இது காங்கிரஸ் கட்சிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது. இதையே முன்வைத்து அதிமுக தரப்பில் முதலமைச்சர் பழனிச்சாமி முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் பரப்புரை செய்தனர். மேலும் அதிமுக பண பலத்திற்கு ஈடு கொடுக்க காங்கிரஸ் ரூபி மனோகரனை வேட்பாளராக அறிவித்துள்ளது எனக்கூறப்பட்டது. ஆனால் பணம் என்பதை தாண்டி மக்கள் தொகுதிக்கு தெரிந்த முகத்தை அடையாளம் கண்டுள்ளனர் என்பதை இந்த தேர்தல் நிரூபித்துள்ளது.
மேலும் பரப்புரை யுக்திகளில் காங்கிரஸ் அடிமட்டத்தில் சரியாக செயல்படாதது, காங்கிரஸ் நிர்வாகிகளிடையே ஒற்றுமை இல்லாதது போன்றவை காங்கிரஸ் கட்சியின் படுதோல்விக்கு மிக முக்கிய காரணமாகியுள்ளது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: 'தேர்தல் வெற்றி என்பது மக்கள் அளிக்கும் நற்சான்று' - ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிக்கை