திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களில் நாள்தோறும் சராசரியாக 200 முதல் 300 பேர் வரை கரோனோவால் பாதிக்கப்பட்டனர்.
தற்போது சராசரியாக 20 பேர் மட்டுமே இம்மாவட்டத்தில் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக கடந்த வாரங்களில் ஒற்றை இலக்கங்களில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்தது. இதுவரை மாவட்டம் முழுவதும் 14,176 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மாநகர காவல் துறை புதுமையான நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது. சாலைகளில் முகக்கவசம் அணியாமல் சுற்றித்திரியும் வாகன ஓட்டிகளிடம் நெல்லை மாநகர உதவி ஆணையர் சேகர் (சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு) தலைமையிலான போலீசார் நூதன விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதன்படி, சாலைகளில் முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு கரோனோ நோயின் பாதிப்பு, அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து எடுத்துரைக்கின்றனர்.
பின்னர் போஸ்ட் கார்டு ஒன்றில் வீட்டு முகவரியுடன், முகக்கவசம் அணிவோம் என உறுதிமொழியைக் கைப்பட எழுதி காவல் துறையினர் பெற்றுக் கொண்டனர். அதை முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளின் வீடுகளுக்கு அனுப்பி நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
நேற்று (அக்.,31) தச்சநல்லூர் பகுதியில் நெல்லை மாநகர காவல் துறையினர் இந்த நடவடிக்கையினை தொடங்கினர். நேற்று ஒரே நாளில் மட்டும் 300 பேருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் உதவி ஆணையர் சேகர் தெரிவித்தார்.
இன்று இரண்டாவது நாளாக நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதில் சுமாராக 200 வாகன ஓட்டிகளின் வீட்டிற்கு கடிதம் அனுப்பவுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
முகக்கவசம் அணியாத நபர்களின் வீட்டிற்கு கடிதம் அனுப்பும் நடவடிக்கைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக காவல் உதவி ஆணையர் சேகர் தெரிவித்தார்.
பெரும்பாலான பெற்றோர்கள் காவல் துறையினரைத் தொலைபேசியில் அழைத்து முகக்கவசம் அணியாமல் தங்கள் குடும்பத்தினரை வெளியில் அனுப்பமாட்டோம் எனத் தெரிவிப்பதாக உதவி ஆணையர் சேகர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
இதையும் படிங்க:கட்டுபாடுகளுடன் பள்ளிகள், திரையரங்குகள் திறக்க அனுமதி!