திருநெல்வேலி: பிரபல மருத்துவரும், முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினருமான ஏ.எல்.சுப்பிரமணியனின் உறவினருமான பூவலிங்கம் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது உடலுக்கு பல்வேறு முக்கிய பிரமுகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று திருநெல்வேலிக்கு வந்து மருத்துவர் பூவலிங்கத்தின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி, தொடர்ந்து அவரின் குடும்பத்தாரிடம் ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, 'மருத்துவர் பூவலிங்கம் மிக எளிமையான முறையில் பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்தார். எனவே, அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்' எனக் கூறினார்.
தொடர்ந்து தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைக்க வேண்டும் என்ற ஆளுநரின் சர்ச்சையான கருத்து குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு, "தமிழ்நாடு என்ற பெயர் வைக்க வேண்டும் என சங்கரலிங்கனார் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வந்தார்கள். அதை திமுக ஆதரித்தது. அதன் பிறகு அண்ணா முதலமைச்சரான பிறகு அவர் தமிழ்நாட்டிற்கு "தமிழ்நாடு" எனப் பெயர் வைக்க வேண்டும் என இலக்கிய உதாரணங்களை எடுத்து கூறினார். தமிழ்நாடு என்பது இலக்கியங்களில் இருக்கிறது. சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களில் தமிழ்நாடு என்று தான் இருக்கிறது. எனவே, இந்த பெயரை எல்லோரும் ஏற்றுக் கொண்டு, நான் தமிழ்நாடு என்று சொல்வேன், நீங்கள் வாழ்க என்று கூற வேண்டும் என அண்ணா சொன்னார்.
காங்கிரஸ் கட்சித் தலைவர்களும், அனைத்து கட்சித் தலைவர்களும் அண்ணா தமிழ்நாடு என்று சொல்ல வாழ்க!... என்று மூன்று முறை சொன்னார்கள். இப்படி ஒரு பெரிய வரலாறு இருக்கிறது. இந்த வரலாறு தெரியாமல் ஆளுநர் புதிய குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நோக்கத்தோடு மட்டுமல்ல, அதற்குப் பின்னால் சங் பரிவார் சக்திகள் அவரை இயக்கிக் கொண்டிருக்கிறது.
அவர்களின் கருவியாக, போலித்தனமான ஏஜென்ட் ஆக ஆளுநர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவர் பெயரை மாற்றிக்கொண்டால் ரொம்ப நல்லது, தமிழ்நாடு என்ற பெயரை யாரும் மாற்ற முடியாது. அது சரித்திரத்தில் இடம் பெற்று, தியாகத்தால் சூட்டப்பட்ட பெயராகும்" என்று வைகோ தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'திராவிட மாடல்' வார்த்தை தவிர்ப்பு.. சட்டப்பேரவையில் பாதியில் வெளியேறிய ஆளுநர்!