திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கணினி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. தற்போது பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதால் இது குறித்து ஆட்சியரிடம் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷை சந்தித்து மனு அளித்தார் .
மனு அளித்துவிட்டு வெளியே வந்தபோது செய்தியாளர்களிடம் பேசிய உதயகுமார், "கூடங்குளம் அணு உலைகளில் கட்டுமான குளறுபடிகள், மின் உற்பத்திக் கோளாறுகள், உலைகளின் இயக்கக் குழப்பங்கள் என பல்வேறு பிரச்னைகள் இருப்பதை நாங்கள் ஆதாரத்துடன் தொடர்ந்து முன்வைத்துவருகிறோம்.
ஆனால், அணுமின் நிலைய நிர்வாகம் உண்மைக்குப் புறம்பான தகவல்களை மட்டுமே சொல்லிவருகிறது. அதேபோன்று எங்களை முடக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் எங்கள் மீது பல்வேறு பொய்யான வழக்குகளைப் பதிவு செய்துவருகின்றனர். தற்போது, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஒரு கணினி வழித்தாக்குதல் நடந்திருப்பதாகச் செய்தி ஒன்று வலம்வருகிறது.
ஆனால், கூடங்குளத்தில் பணியாற்றும் அலுவலர் ஒருவர் இங்கு எதுவுமே நடக்கவில்லை என்கிறார். ஆனால், அடுத்த நாளே மும்பையிலுள்ள இந்திய அணுமின் கழக அலுவலர் கணினியில் வைரஸ் பரவியிருந்தது உண்மைதான் என்று கூறுகிறார். இதில் எது உண்மை, இது குறித்து மத்திய மாநில அரசுகள் வாய்திறக்கவில்லை, இது கண்டிக்கத்தக்கது.
கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகமும் அலுவலர்களும் பல கோடி மக்கள் உயிர்களுடன் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருப்பது வேதனையளிக்கிறது. கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து சர்வதேச சார்பற்ற விசாரணை நடத்தி ஒரு வெள்ளையறிக்கை தயாரிக்கப்பட்டு மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும். கூடங்குளத்தில் விபத்து ஏதேனும் நடந்தால் அதற்கு மாவட்ட ஆட்சியர்தான் பொறுப்பு" எனக் கூறினார்.