திருநெல்வேலி: களக்காடு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வைரக்கற்கள் வெட்டி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மஞ்சுவிளை அருகே சந்தேகப்படும் படியாக பையுடன் நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அவர்கள் முன்னுக்கு பின் முரணாக அளித்த தகவலால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களது பையை சோதனை செய்த போது பெரிய கல் ஒன்று இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், இருவரும் களக்காடு மஞ்சுவிளையை சேர்ந்த சுசில்குமார் மற்றும் மேலப்பத்தையைச் சேர்ந்த வேல்முருகன் என தெரியவந்தது.
இந்த அரிய வகை கல்லுக்குள்ளே வைரம் இருப்பதாக கூறி வெளி மார்க்கெட்டில் விலைபேசியது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 75 லட்சம் மதிப்பு என கூறி விற்பனை செய்ய முயற்சி செய்துள்ளனர் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. பின்னர் அவற்றை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட வைரக்கல்லின் உண்மை தன்மையை அறிய அதனை பரிசோதிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கல்லூரி மாணவனை கடத்தி தாக்கிய வழக்கு: 9 மாணவர்கள் கைது