திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் போக்குவரத்துக் கழக பணிமனையில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள், இன்று (செப்.27) அதிகாலையில் திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒப்பந்தப்படி தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விடுப்பு மறுக்கப்படுவதாகவும், வார ஓய்வையும் நிர்வாகம் வழங்கவில்லை எனவும், ஓட்டுநர்களும், நடத்துநர்களும் மாற்றுத் தடத்திற்குச் செல்ல மாட்டேன் எனவும், அதிக நேரம் பணி செய்ய மாட்டேன் (OT) எனக் கூறினால் உயர் அதிகாரிகள் எந்தவித விசாரணையும் இன்றி தற்காலிக பணிநீக்கம் அல்லது பணியிட மாற்றம் செய்கின்றனர் எனவும் குற்றம் சாட்டினர்.
எனவே, இதனைக் கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போக்குவரத்துப் பணிமனை உள்ளே இன்று அதிகாலை 3 மணி முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வள்ளியூர் பணிமனையில் இருந்து 45 பேருந்துகள் வெளி மாவட்டங்கள் மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்கு தினசரி இயக்கப்பட்டு வருகிறது.
இப்போராட்டத்தால் 45 பேருந்துகளில் 5 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. மீதம் உள்ள 40 பேருந்துகள் வள்ளியூர் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டன. இதையடுத்து வள்ளியூர் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டதைத் தொடர்ந்து, சுமார் மூன்று மணி நேரத்திற்குப் பிறகு வழக்கம்போல் பேருந்துகள் இயக்கப்பட்டன. ஒப்பந்தப்படி தொழிலாளர்களுக்கு விடுப்புகள் வழங்கப்படுவதாகவும், தொழிலாளர்களுக்கு வார ஓய்வும் வழங்கப்படும் எனவும், பணியிடை மாறுதல் செய்யப்பட்ட தொழிலாளரின் பணியிட மாறுதல் திரும்பப் பெறப்படும் என்ற கோரிக்கைகள் ஏற்கப்பட்டதினால் உள்ளிருப்பு போராட்டம் கைவிடப்பட்டதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:பழனி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.2.58 கோடி வசூல்! தங்கம், வெள்ளி மட்டும் எவ்வளவு தெரியுமா?