திருநெல்வேலி: அரபிக் கடலில் உருவான புதிய வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 தென் மாவட்டங்களில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்து வருகிறது. கடந்த 16ஆம் தேதி நள்ளிரவு முதல் நெல்லை மாவட்டம் முழுவதும் மழை பெய்யத் தொடங்கிய நிலையில் தற்போது வரை தொடர்ந்து இடைவிடாது கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.
வரலாறு காணாத அளவில் சுமார் 35 மணி நேரம் இடைவெளி இல்லாமல் கொட்டி தீர்த்த கனமழையால் நெல்லை மாவட்டம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இந்த பெரும் கனமழையைச் சற்றும் எதிர்பாராத மக்கள் வெள்ளத்தில் சிக்கி கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதனையடுத்து தமிழ்நாடு அரசு வெள்ள நிவாரணப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. தமிழ்நாடு மற்றும் தேசிய மீட்புப்படையினர் மீட்புப்பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதுமட்டுமின்றி, இந்திய ராணுவம் மற்றும் கடலோர பாதுகாப்புப் படையினரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நெல்லையில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தையடுத்து பல்வேறு சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. நெல்லையை மையமாகக் கொண்டு துண்டிக்கப்பட்ட சாலைகளின் விவரம் பின்வருமாறு:
- நெல்லை - நாகர்கோவில் NH
- நெல்லை - திருச்செந்தூர் ரோடு
- நெல்லை - தூத்துக்குடி ரோடு
- நெல்லை - கோவில்பட்டி ரோடு தச்சநல்லூரில்,
- நெல்லை புது பஸ்டாண்ட் - அம்பாசமுத்திரம் ரோடு(முன்னீர்பள்ளம் முதல் பல இடங்களில் துண்டிப்பு),
- பேட்டை - பழைய பேட்டை Link ரோடு
- நெல்லை டவுண் - சேரன்மகாதேவி ரோடு
- முக்கூடல் - கடையம் ரோடு
- இடைகால் - ஆலங்குளம் ரோடு
- அம்பாசமுத்திரம் - கல்லிடை - வெள்ளங்குளி ஆகிய பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் பொறுத்தவரையில் மூலைக்கரைப்பட்டியில் அதிகபட்சமாகக் கடந்த 40 மணி நேரத்தில் சுமார் 70 செ.மீ., மழைப் பதிவாகியுள்ளது. அதேபோல் பாளையம்கோட்டை, களக்காடு, அம்பாசமுத்திரம், நெல்லை மாநகரத்திலுள்ள நம்பியார் அணைப் பகுதி, கொடுமுடி ஆறு போன்ற மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மிகக் கனமழை பெய்தது.
இதைத்தொடர்ந்து, நெல்லை சந்திப்பு சுற்றுவட்டாரப் பகுதிகள் முழுவதும் வெள்ள நீரில் சூழ்ந்திருப்பதால் அங்கு வசிக்கும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். வெள்ளத்திலிருந்து தப்பிக்கப் பலர் வீடுகளை காலி செய்து உறவினர்கள் வீட்டிற்குச் செல்வதற்காக மூட்டை முடிச்சுகளுடன் சாலைகளில் நடந்தே செல்கின்றனர். அதேபோல் நெல்லை டவுன், பேட்டை, மேலப்பாளையம், வண்ணாரப்பேட்டை போன்ற மாநகரின் பல்வேறு இடங்களில் மழை பாதிப்பால் மக்கள் அவர்களது வீட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர்.
இதையும் படிங்க: தென் மாவட்டங்களில் அதி கனமழை; திருநெல்வேலியில் நிவாரண பணியில் ஈடுபட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!