திருநெல்வேலி: மனிதர்களின் வாழ்வில் சினிமா ஒரு முக்கிய அங்கமாக மாறிவிட்டது என்றே கூறலாம். சினிமா பொழுதுபோக்கு அங்கமாக இருந்தாலும் கூட அதில் வரும் காட்சிகள் பலரது வாழ்க்கையைச் சீரழிப்பதையும் நம்மால் பார்க்க முடிகிறது.
சினிமாவில் காட்டப்படுவதைப் போன்று கொடூரமான கொலைகள், கொள்ளைகள், மோசடிகள், பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அன்றாட வாழ்க்கையிலும் நடைபெறுவதே இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
சினிமாவில் காட்டப்படும் நல்ல விஷயங்களை உள்வாங்கிக் கொண்டு அதை நிஜ வாழ்க்கையில் வெளிப்படுத்தும் நபர்களை பார்ப்பது அரிதாகிவிட்டது, இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் ரஜினி ரசிகர் ஒருவர் திரைப்படங்களில் ரஜினியின் கதாபாத்திரத்தை உள்வாங்கி நிஜ வாழ்க்கையிலும் அவரைப் போன்று வாழ்ந்துவரும் சம்பவம் அனைவரிடமும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
1980 - 1990 காலக்கட்டங்களில் தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினிகாந்த் மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்தார். அப்போது அவருக்கு தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் பட்டாளம் உருவாகியது. அந்த ரசிகர்கள் பட்டாளத்தில் ஒருவர்தான் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த முருகன்.
நெல்லை மீனாட்சிபுரத்தில் வசித்துவரும் முருகனுக்கு, கோகிலா என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். ஆட்டோ ஓட்டுநரான முருகன் ஒரு மிகப்பெரிய ரஜினி ரசிகர்.
நடிகர் சிவகார்த்திகேயன் கூட ஒரு தீவிர ரஜினி ரசிகர் தான். அதன் காரணமாகவே அவர் ரஜினி முருகன் என்ற படத்தில் நடித்திருந்தார். ஆனால் அவருக்கு முன்பாகவே நெல்லையில் ஒரு ரஜினிமுருகன் உருவெடுத்த கதையை யாரும் அறிந்திருக்க மாட்டார்கள்.
தனது 15 வயதில் ரஜினி ரசிகனாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட முருகன் தொடர்ந்து அவரது அனைத்து படங்களையும் தவறவிடாமல் திரையரங்கிற்குச் சென்று பார்த்துவிடுவார்.
ரஜினியின் கதாபாத்திரங்களைப் பார்த்து அவர் மீது அளவுக்கு அதிகமான ஆசை கொண்ட முருகன் ஒருகட்டத்தில் தனது பெயருக்கு முன்னால் ரஜினி என்ற பெயரை சேர்த்து தன்னை ரஜினி முருகன் என்று அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார். அன்றிலிருந்து மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள அனைவரும் அவரை ரஜினி முருகன் என்று அழைக்கத் தொடங்கினர்.
ரஜினி என்ற பெயரை மட்டும் வைத்துக் கொண்டால் போதாது திரைப்படங்களில் அவரின் கதாபாத்திரங்களை போலவே நாமும் நிஜவாழ்க்கையில் இருக்க வேண்டும் என்று எண்ணிய ரஜினி முருகன் தான் பார்க்கும் ஆட்டோ தொழிலில் மிகவும் நேர்மையுடன் இருந்துவருகிறார்.
பயணிகள் தனது ஆட்டோவில் தவறவிட்ட பணம், விலை மதிப்புள்ள பட்டுப் புடவைகளை அவர் சம்பந்தப்பட்ட நபர்களிடம் ஒப்படைத்ததுவிடுவார்.
சமீபத்தில் ரஜினி முருகனின் மனைவி கோகிலா சாலையில் இரண்டு லட்சம் பணத்தை கண்டெடுத்துள்ளார். உடனடியாக தனது கணவரை அழைத்துச் சாலையில் இரண்டு லட்சம் ரூபாய் பணம் எடுத்ததாகவும் அதை என்ன செய்யலாம் என்றும் ரஜினி முருகனிடம் கேட்டுள்ளார்.
சற்றும் யோசிக்காமல் அந்தப் பணத்தை உடனடியாக உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறிய ரஜினி முருகன், அந்தப் பகுதியில் வசிக்கும் நபர்களிடம் இது குறித்து விசாரித்துள்ளார். பின்னர் அங்குள்ள வியாபாரி ஒருவர் சாலையில் பணத்தைத் தவறவிட்டது தெரியவந்தது.
இதையடுத்து ரஜினிமுருகன், அவரது மனைவி கோகிலா இருவரும் உடனடியாக அந்த வியாபாரியின் வீட்டிற்குச் சென்று இரண்டு லட்சம் ரூபாய் பணத்தைத் திரும்ப ஒப்படைத்துள்ளனர்.
இந்தத் தகவலை அறிந்து நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர் அர்ஜுன் சரவணன் நேர்மை தவறாத ஆட்டோ ஓட்டுநர் ரஜினி முருகன், அவரது மனைவி கோகிலாவை நேரில் அழைத்து பரிசு வழங்கி பாராட்டினார். கடும் வறுமையிலும் ரஜினி முருகன் நேர்மையாக நடந்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சர்யச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினிமுருகனின் ஒரே மகன் விபத்தில் சிக்கி வேலைக்குச் செல்ல முடியாமல் வீட்டில் முடங்கி உள்ளார். ரஜினி முருகனின் வருமானத்தை மட்டும் நம்பி அவரது குடும்பம் வாழ்க்கையை நகர்த்தி வருகிறது. மகனின் சிகிச்சை செலவுக்கு பல லட்சம் செலவு செய்த ரஜனி முருகன் தற்போது கடனில் தத்தளித்து வருகிறார்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை சாலையில் எடுத்த பிறகும் கூட அதை அனுபவிக்க வேண்டும் என்று சற்றும் யோசிக்காமல் உரியோரிடம் ஒப்படைத்த ரஜினி முருகனின் செயல் பெரும் பாராட்டை பெற்றுள்ளது.
இன்று மட்டுமல்ல என்றுமே தலைவர் ரஜினியின் வழியில் நேர்மையுடனும் உண்மையுடனும் ஆட்டோ ஓட்டுவேன் என்று தெரிவிக்கிறார் ரஜினி முருகன்.
ரஜினிமுருகன் செய்யும் பெரும்பாலான நல்ல விஷயங்கள் வெளியில் தெரிவதில்லை என்றும் அவர் தங்கள் பகுதிக்கு ஏராளமான உதவிகளை செய்துள்ளார் என்றும் தெரிவிக்கிறார் அதே பகுதியைச் சேர்ந்த நம்பிராஜன்.
சினிமாவை பார்த்து கெட்டுப் போகும் இந்தக் காலத்து இளைஞர்களுக்கு மத்தியில் சினிமாவை பார்த்து அதில் வரும் நல்ல விஷயங்களை உள்வாங்கிக் கொண்டு நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக வலம்வரும் ஆட்டோ ஓட்டுநர் ரஜினி முருகனின் செயல் பாராட்டுக்குரியதே.
இதையும் படிங்க: தடைகளை தன்வசப்படுத்திய பெண்: இயற்கை விவசாய ஆசிரியையாக மாறிய பெண் விவசாயி!