திருநெல்வேலி மாவட்டத்தில் பொருட்காட்சி திடல் அருகே உள்ள டவுன் சாஃப்டர் அரசு உதவிபெறும் பள்ளியில் கழிவறை சுவர் இடிந்துவிழுந்த விபத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், நான்கு மாணவர்கள் படுகாயங்களுடன் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் நான்கு மாணவர்களையும் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
48 மணி நேரத்தில் ஆய்வு
அதைத்தொடர்ந்து அவர் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், "நெல்லையில் சாஃப்டர் பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து விழுந்த விபத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். நான்கு மாணவர்கள் காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிறப்புச் சிகிச்சையில் உள்ளனர்.
முதற்கட்டமாகப் பொதுப்பணித் துறை மூலம் நடைபெற்ற ஆய்வில் சம்பந்தப்பட்ட சுவர் அடித்தளம் இல்லாமல் கட்டப்பட்டதே விபத்துக்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது.
மேலும், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகிறோம். சிறப்புக் குழு ஒன்று அமைத்து மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் கட்டடத்தின் தன்மை குறித்து அடுத்த 48 மணி நேரத்தில் ஆய்வு மேற்கொள்ளப்படும்" என்று தெரிவித்தார்.
நெல்லை மாநகரில் இயங்கிவரும் அரசு உதவி பெறும் சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியில், சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்றுவருகின்றனர்.
இதையும் படிங்க: பள்ளி சுவர் இடிந்து மூவர் பலி: ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்த ஸ்டாலின்!