தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அனைத்து கல்வி நிறுவனங்கள் உள்பட திரையரங்கம், கேளிக்கை விடுதிகள் உள்ளிட்டவை மார்ச் 31 ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் தொற்றுக்காக தமிழ்நாடு முழுவதும் தலைமை அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு தொற்றின் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் நேற்று முன்தினம் நெல்லை அரசு மருத்துவமனையில் துபாயிலிருந்து வந்த நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள சமூகரெங்கபுரத்தைச் சேர்ந்த மகாராஜன் என்பவர் கரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டார்.
வைரஸ் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் இவரது ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. அந்தப் பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யபட்டது.
இது குறித்து நேற்று அமைச்சர் விஜய்பாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்த நிலையில், அவர் தற்போது நலமுடன் இருப்பதாகவும், சிறப்பாக சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சமீபத்தில் வெளிநாடு பயணம் மேற்கொண்டவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் - விஜய பாஸ்கர்