திருநெல்வேலி: பாளையங்கோட்டை அருகே மூளிக்குளத்தைச் சேர்ந்தவர் பாஜக பிரமுகர் ஜெகன், இவரது வீட்டின் அருகே வைத்து சில தினங்களுக்கு முன்பு, ஒரு கும்பலால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். ஜெகன் பாஜகவில் மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளராக பதவி வகித்து வந்தார். இதனால் ஜெகன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அரசியல் ரீதியாகவும் நெல்லையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்த கொலை சம்பவம் குறித்து பாளையங்கோட்டை போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து முத்துப்பாண்டி, இசக்கிமுத்து, பரமராஜ், மாணிக்கம், ஜீவா, விக்னேஷ், சந்துரு, பாஸ்கர், அஜித்குமார் உள்பட 10 பேரை கைது செய்தனர். அதேசமயம் மூளிக்குளம் பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் பிரபு உத்தரவில் தான் ஜெகன் கொலை செய்யப்பட்டதாகவும், எனவே பிரபுவை உடனே கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கொலை செய்யப்பட்ட ஜெகன் குடும்பத்தினர் உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரபுவின் மனைவி ரேவதி நெல்லை மாநகராட்சியின் மண்டல சேர்மனாக உள்ளார் சில மாதங்களுக்கு முன் ரேவதிக்கும் அவரது கணவர் பிரபுவுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னைக்கு ஜெகன் தான் காரணம் என்றும், அதனால் ஏற்பட்ட முன்பகையின் காரணமாகவே ஜெகனை பிரபு கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் பிரபு, முன்னாள் திமுக மாவட்ட செயலாளரும் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் வகாப்பிற்கு வலதுகரமாக செயல்பட்டு வருகிறார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இக்கொலை தொடர்பாக வெளியிட்ட கண்டன அறிக்கையில், அப்துல் வகாப்பை நேரடியாக குறிப்பிட்டிருந்தார். இதானல் பிரபு விவகாரத்தில் நெல்லை மாநகர காவல்துறைக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து இந்த கொலை வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட பிரபு, பாஜகவின் நெருக்கடியை தொடர்ந்து முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.
அதேசமயம் அரசியல் செல்வாக்கு மற்றும் பண பலம் காரணமாக பிரபுவை கைது செய்வதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டது. பிரபுவும் நெல்லையை விட்டு வெளியேறி தலைமறைவானார். எனவே பிரபுவை கைது செய்ய வலியுறுத்தி பாஜக சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இது போன்ற சூழ்நிலையில் இன்று (செப். 03) பிரபு தனது வழக்கறிஞர் மூலம் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சரணடைந்தார். அதை தொடர்ந்து போலீசார் விசாரணைக்கு பிறகு அவரை கைது செய்தனர்.
பிரபு இந்த வழக்கின் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டாலும் அரசியல் பின்புலம் காரணமாக அவர் கைது செய்யப்படமாட்டார் என்று போலீஸ் வட்டாரத்தில் கூறப்பட்டது. அதேசமயம் ஏற்கனவே அரசியல் ரீதியாக பாஜக திமுக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. குறிப்பாக அண்ணாமலை அடுத்தடுத்து திமுக முக்கிய நிர்வாகிகளின் சொத்து பட்டியல் வெளியீடு மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார்.
எனவே இந்த கொலை வழக்கால் அரசியல் ரீதியான தாக்கம் நீடிக்க வாய்ப்பிருப்பதால் பிரபுவை சரண்டர் ஆகும்படி திமுக உயர்மட்ட நிர்வாகிகள் அவருக்கு நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. எனவே தான் தலைமறைவாக இருந்த பிரபு இன்று திடீரென சரண்டர் ஆகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் ஜெகனை கொலை செய்ய பிரபு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டு பல்வேறு கட்டங்களாக அதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. பிரபு தனக்கு வேண்டப்பட்ட ரஞ்சித் என்பவர் மூலம் இதற்கான வேலைகளில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதேசமயம் ரஞ்சித் நேரடியாக இந்த கொலையில் ஈடுபடவில்லை, இருப்பினும் போலீசார் தன்னை இந்த வழக்கில் சேர்த்து விடுவார்களோ என அஞ்சியதாகவும், அதனால் தான் ரஞ்சித் சமீபத்தில் வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர்கள் பங்கேற்றது ஏன்? - அர்ஜூன் சம்பத் ஆவேசம்