திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ரஜினிமுருகன். இவர் நேற்று (செப். 29) வழக்கம்போல் நெல்லை சந்திப்புப் பகுதியில் ஆட்டோ ஓட்டியுள்ளார். அப்போது சாலையில் கேட்பாரற்றுக் கிடந்த பையை எடுத்து பார்த்தபோது, அதில் பணம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து, அந்தப் பணத்தை ரஜினிமுருகன் நெல்லை சந்திப்பு காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். பின்னர் காவல் துறையினர் இந்தப் பையை ஆய்வு செய்தபோது, அதனுள் இரண்டு லட்சம் ரூபாய் பணம் இருப்பது தெரியவந்தது.
இந்த நிலையில் சாலையில் கிடந்த இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை நேர்மையுடன் காவல் துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் ரஜினிமுருகனை, நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் அர்ஜுன் சரவணன் நேரில் அழைத்துப் பாராட்டினார்.
மேலும் நெல்லை சந்திப்பு பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர்தான் இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை சாலையில் தவறவிட்டது தெரியவந்தது. இதையடுத்து சுப்பிரமணியனை நேரில் அழைத்து அவரது பணத்தை துணை ஆணையர் ஒப்படைத்தார்.
ஆட்டோ ஓட்டுநர் ரஜினிமுருகன் கரோனோ காலத்தில் கடுமையாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கடும் வறுமையில் வாழ்ந்துவருகிறார். இருப்பினும் வறுமையில்கூட மனித நேயத்துடனும் நேர்மையுடனும் சாலையில் கிடந்த பணத்தை காவல் துறையிடம் ஒப்படைத்தது பொதுமக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க...பாலியல் தொழிலாளிகளுக்கு ரேஷன் பொருள்கள் வழங்க உச்ச நீதிமன்றம் மாநிலங்களுக்கு வலியுறுத்தல்...!