நெல்லை: திருநெல்வேலியைச் சேர்ந்தவர் பேச்சாளர் நெல்லை கண்ணன். இவர் உடல்நலக் குறைவால் கடந்த ஆண்டு உயிரிழந்தார். இலக்கியவாதி, எழுத்தாளர், பட்டிமன்ற நடுவர் என நெல்லை கண்ணன் பன்முகத் திறமை கொண்டிருந்தார். குறிப்பாக மேடைகளில் தமிழை இலக்கிய சுவையோடு நெல்லை மொழியில் யதார்த்தமாக பேசுபவர். இவர் எழுதிய ‘குறுக்குத்துறை ரகசியங்கள்’ என்ற நூல் மிகவும் பாராட்டைப் பெற்றது. தமிழ்க் கடவுள் என்றும் இவர் அழைக்கப்பட்டார். மறைந்த நெல்லை கண்ணன் நினைவாக நெல்லையில் அவரது பெயரில் சாலைக்கு பெயர் சூட்ட வேண்டும் என அவரது குடும்பத்தார் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி, நெல்லை டவுன் ஆர்ச்சில் இருந்து குறுக்குத்துறை செல்லும் சாலையில் தென் வடல் சாலைக்கு நெல்லை கண்ணன் பெயரை சூட்ட நெல்லை மாநகராட்சி மன்றம் அனுமதி வழங்கலாம் என்று அரசின் முதன்மைச் செயலாளர் சமீபத்தில் கடிதம் அனுப்பி இருந்தார். இந்த கடிதத்தின் அடிப்படையில் சமீபத்தில் நடைபெற்ற நெல்லை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் மேயர் சரவணன் இதுதொடர்பாக தீர்மானம் கொண்டு வந்தார்.
அதே சமயம் திமுக கவுன்சிலர் சங்கர் என்பவர், இந்த தீர்மானத்திற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்தார். அவர் பேசும்போது, நெல்லை கண்ணன் மறைந்த முதலமைச்சர் கருணாநிதியை அவதூறாகப் பேசினார். எனவே, அவரது பெயரை சாலைக்கு சூட்டக்கூடாது என தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். அதாவது நெல்லை கண்ணன் காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது சென்னை சேப்பாக்கம் தொகுதியில் கருணாநிதியை எதிர்த்துப் போட்டியிட்டார். மேலும் பல்வேறு மேடைகளில் அவர் கருணாநிதி குறித்து விமர்சனம் செய்துள்ளார். இதனால் தான் அவரது பெயரை சாலைக்கு சூட்ட நெல்லை மட்டுமல்லாமல், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.
எனவே, தீர்மானம் ஒத்தி வைக்கப்படுவதாக மேயர் அறிவித்தார். அதேசமயம், தமிழ்நாடு அரசு எடுத்த முடிவின்படி முதன்மைச்செயலாளர் எழுதிய கடிதத்தை மதிக்காமல் தீர்மானத்தை ஒத்திவைத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கிடையில் இந்த தகவலை அறிந்த அரசின் மேலிடம், நெல்லை மாநகராட்சி ஆணையர் மற்றும் மேயரை கடுமையாக எச்சரித்ததோடு விரைவில் மற்றொரு கூட்டம் நடத்தி தீர்மானத்தை நிறைவேற்றும்படி உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இது போன்ற சூழ்நிலையில் இன்று நெல்லை மாநகராட்சி அவசரக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற மேயர் சரவணன் ஏற்கனவே திட்டமிட்டபடி நெல்லை டவுன் ஆர்ச்சிலிருந்து குறுக்குத்துறை செல்லும் தென்வடல் சாலைக்கு நெல்லை கண்ணன் பெயரை சூட்ட இந்த மாமன்றம் முடிவு செய்துள்ளதாக பேசினார். இந்த முறை கவுன்சிலர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்காததால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேயர் தீர்மானத்தை வாசித்த மறுநொடியே உடனே கூட்டமும் நிறைவு பெற்றது. அப்போது சில கவுன்சிலர்கள் தீர்மானத்தை வரவேற்றுப் பேச அனுமதி கேட்டனர்.
ஆனால், மேயர் அனுமதி வழங்காமல் அங்கிருந்து சென்றுவிட்டார். அதே சமயம் இன்று நடைபெற்ற கூட்டத்தில் பெரும்பாலான திமுக கவுன்சிலர்கள் பங்கேற்கவில்லை. ஏற்கனவே உள்கட்சி பூசல் காரணமாக மேயர் மீது கவுன்சிலர்கள் பலர் அதிருப்தியில் இருக்கும் சூழலில் தங்களுக்கு விருப்பமில்லாத தீர்மானத்தை நிறைவேற்றுவதால் இன்று கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணித்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சாதிப்பெயரைச் சொல்லி திட்டியதால் இளைஞர் தற்கொலை முயற்சி - நடந்தது என்ன?