நெல்லை மாநகராட்சி நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 55 வார்டுகளை உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது. இதில் 51 மாமன்ற உறுப்பினர்கள், திமுக மற்றும் கூட்டணி கட்சிகளைச் சார்ந்தவர்கள், நான்கு மாமன்ற உறுப்பினர்கள், அதிமுகவைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். அதிக பெரும்பான்மையுடன் திமுக மாநகராட்சியை கைப்பற்றி மேயராக 14-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சரவணனும், துணைமேயராக ஒன்றாவது வார்டு மாமன்ற உறுப்பினர் ராஜூவும் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மாமன்ற உறுப்பினர்கள் இரண்டு பிரிவுகளாக பிரிந்து, மாமன்ற கூட்டத்தில் மாநகராட்சி மேயருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். நேற்றைய தினம் நடந்த மாமன்றக் கூட்டத்தில் திமுக மாநகர செயலாளராக உள்ள சுப்பிரமணியம் மற்றும் சிலர் மாநகராட்சி மேயர் அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு காண்ட்ராக்டர்கள் உள்ளிட்டவர்களுடன் பேசி வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
மேலும் மாநகராட்சி மேயர் மீது அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில் மாநகராட்சி மக்கள் குறைதீர் கூட்டம் இன்றைய தினம் நடைபெற்றது. வழக்கமாக மேயர், துணை மேயர் தலைமையில் மாநகராட்சி ஆணையர் முன்னிலையில் நடைபெறும்.
ஆனால், இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டம் வழக்கமாக நடைபெறும் இடத்தில் நடத்தப்படாமல், ஆணையாளர் அறையில் நடந்தது. இந்த நிலையில் நெல்லை மாநகர திமுக செயலாளராக உள்ள சுப்பிரமணியம் மற்றும் பாளையங்கோட்டை திமுக பகுதி செயலாளர் செல்லத்துரை உள்ளிட்டோர் மாநகர திமுக அலுவலகம் அமைந்துள்ள 27ஆவது வார்டு பகுதியில் வேகத்தடை அமைக்க கோரிக்கை வைத்து, மாநகராட்சி அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர்.
முதல் தளத்தில் உள்ள ஆணையாளரை சந்தித்து விட்டு, கீழே வந்த திமுக மாநகர செயலாளர் மற்றும் திமுக பகுதி செயலாளர் ஆகியோரை அப்பகுதியில் குழுமியிருந்த திமுக மாமன்ற உறுப்பினர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் வழிமறித்து உட்கட்சி விவகாரம் தொடர்பாக பேசியதாக சொல்லப்படுகிறது.
மேலும் மாநகராட்சி மேயர் உள்ளிட்டோரை கூட்டங்கள் தொடர்பாக சந்திப்பது, கட்சி வாட்ஸப் குழுவில் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களை தவறாக சித்தரித்து பதிவுகள் வெளியிடுவது, உள்ளிட்டவைகள் தொடர்பாகவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றி இரண்டு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளாக மாறியது. இந்த காட்சிகள் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்தவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவம் குறித்த தகவல் அறிந்து தரைதளத்திற்கு வந்த மாநகராட்சி ஆணையாளர் இரண்டு தரப்பையும் வெளியேற அறிவுறுத்தினார். இது அரசு அலுவலகம், கட்சிப் பிரச்னைகளை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் எனக் கூறி இரண்டு தரப்பையும் வெளியேற்றியதால் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது. திமுக உட்கட்சி விவகாரம் மாநகராட்சி அலுவலகம் வரை வந்து பிரச்னையாக மாறியதால் இவ்விவகாரம் பொதுமக்களிடையே அதிருப்தியினை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: குட்கா தடை மீதான தனித்தீர்மானம் சட்டசபையில் கொண்டு வரப்படும் - அமைச்சர் மா.சு உறுதி!