கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக இந்தியா முழுவதும் நேற்று (மார்ச் 24) நள்ளிரவு முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையொட்டி, திருநெல்வேலியில் காவல்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆதரவற்றோர், மருத்துவமனையில் இருப்போருக்கு உதவும் விதமாக திருநெல்வேலி மாநகரில் உள்ள 10 அம்மா உணவகங்களிலும் காலை, மதியம் மாநகர அதிமுக சார்பில் இலவசமாக உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இருசக்கர வாகனங்களை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் காவல்துறை
கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தை பொறுத்தவரை இதுவரை கரோனா பாதிப்பால் ஒருவர் சிகிச்சை பெற்றுவருகிறார். இதுதவிர வெளிநாட்டிலிருந்து வந்த 584 பேர் மாவட்ட நிர்வாகத்தின் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
வைரஸ் பாதித்தவர் சென்ற இடங்களில் எல்லாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் சுகாதாரத்துறை அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டவுடன் உணவு மற்றும் மருத்துவப் பொருள்கள் விற்பனை செய்யும் நிலையங்களைத் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், இன்று காலையில் வாகன போக்குவரத்து பெருமளவு குறைந்து காணப்பட்டது. மேலும், ஒருசில இருசக்கர வாகனங்கள் மட்டும் சென்றன. அத்தியாவசியப் பொருட்கள் வாங்கச் செல்லும் மக்கள் இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் அந்த வாகனங்களைக் கட்டுப்படுத்துவதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை நாளை முதல் கடுமையாகச் செயல்படுத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: 'கரோனா தொற்றை தடுக்க போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை' - எஸ்.பி. வேலுமணி